சேலம்: மத்திய சிறைகளில் சிறை கைதிகள் தங்களது உறவினர்களுக்கு வீடியோ கால் செய்து பேசும் வசதி கரோனா காலத்தில் பின்பற்றப்பட்ட நிலையில் தற்போது சிறை கைதிகள் கம்ப்யூட்டர் மானிட்டரில் வீடியோ கால் செய்து, பார்த்து பேசும் வசதியை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது.
தமிழக மத்திய சிறை, மாவட்ட கிளை சிறை என ஒட்டுமொத்தமாக 136 சிறைகள் உள்ளன. இங்கு சுமார் 20,000க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சிறை கைதிகள் தங்களது உறவினர்களை காண சிறை அதிகாரிகள் உத்தரவுடன் குறிப்பிட்ட மணி நேரம் ஒதுக்கப்படுகிறது. அந்த பார்வையாளர்களுக்கான நேரத்தில் சிறை கைதிகளை உறவினர்கள் பார்த்து பேசி கொள்ள அனுமதிக்கப்படுகிறது.
இந்த பார்வையாளர்கள் நேரத்திலும் சிறை கைதிகளுக்கும், உறவினர்களுக்கும் இடையே உள்ள இரும்பு கம்பிகள் கம்பிகள் பொருந்திய கதவு இருப்பது வழக்கம். மேலும் ஒரே நேரத்தில் 15க்கும் மேற்பட்ட கைதிகள் அந்த இடத்தில் நின்று அவர்களின் உறவினர்களுடன் பேச முடியும். அதனால் மிக கூட்டமாக காணப்படும் நிலையில் யார் என்ன பேசுகிறார்கள் என்பதை கேட்க முடியாது. ஒரே சத்தமாக இருக்கும்.
இக்குறையை போக்கும் வகையில் சிறையில் இருந்து கைதிகள் உறவினர்களுக்கு டெலிபோன் பூத் மூலம் பேசும் வசதி தொடங்கப்பட்டுள்ளது. இந்த வசதி கொரோனா காலகட்டத்தில் இருந்து நடைமுறை படுத்துவதற்காக இருந்தது. தொடர்ந்து, செல்போன் வீடியோ கால் மூலம் கைதிகள் உறவினர்களிடம் பேசுவதற்கான நடவடிக்கையை சிறைத்துறை அதிகாரிகள் மேற்கொண்டனர். ஒவ்வொரு மத்திய சிறைகளிலும் தலா எட்டு நவீன செல்போன்கள் வாங்கி அதன் மூலம் கைதிகளை அவர்களது உறவினர்களிடம் பேச வைத்தனர். இதன் மூலம் கைதிகளும் அவர்களின் குடும்பத்தினரும் வீட்டில் இருந்தபடியே பார்த்து பேசி மகிழ்ச்சியடைந்தனர்.
இதையும் படிங்க: திருமணத்தை மீறிய உறவுக்கு இடையூறு; பெற்ற மகனை கொன்ற தாய்க்கு வாழ்நாள் சிறை தண்டனை!
இந்த நிலையில், ஒரு படி மேலாக தற்போது சிறை கைதிகள் கம்ப்யூட்டர் மானிட்டரில் வீடியோ கால் பார்த்து பேசும் வசதியை தமிழக அரசு மத்திய சிறைகளில் அறிமுகம் செய்தது. ஒன்பது மத்திய சிறைக்கும் 126 கம்ப்யூட்டர்கள் வாங்கப்பட்டு சிறையில் கைதிகள் அறைகளின் பகுதியில் பொருத்தப்பட்டுள்ளது.
சேலம் மத்திய சிறையில் எட்டு கம்ப்யூட்டர்களும், கோவை மத்திய சிறையில் 15 கம்ப்யூட்டர்களும் பொருத்தப்பட்டுள்ளது. இதன்படி மூன்று நாட்களுக்கு ஒரு முறை 12 நிமிடம் நேரம் குடும்பத்தினருடன் கைதிகள் பேசலாம். ஒரு நிமிட நேரத்திற்கு இரண்டு ரூபாய் 25 பைசா கட்டணமாக வசூலிக்கப்படும் என்று சிறைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.