சேலம்: சேலம் மாவட்ட ஆட்சியர் இல்லத்தின் பின்புறமாக அமைந்துள்ளது, ஆத்துக்காடு ஐயப்பன் கோவில் செல்லும் சாலை. இப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேலும், அதன் அருகிலே 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை செயல்படும் தனியார் நடுநிலைப்பள்ளி ஒன்றும் செயல்பட்டு வருகிறது.
தற்போது, மாவட்ட ஆட்சியர் இல்லத்தின் பின்புறப் பகுதியில் ஏற்கனவே பாதாளச் சாக்கடை அமைக்கப்பட்டு, 70 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளது. மேலும், பாதாளச் சாக்கடை இணைப்பு பெறுவதற்காக அந்தப் பகுதியில் உள்ள மக்களிடம் பாதாளச் சாக்கடை கட்டணமும் சேலம் மாநகராட்சி சார்பில் வசூலிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், திறந்த வெளிச் சாக்கடை அமைப்பதாக கடந்த 11ஆம் தேதி சாலையில் 300 மீட்டர் தொலைவிற்கு பள்ளம் தோண்டியுள்ளனர். அதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், பணிகளை அப்படியே கிடப்பில் போட்டு விட்டுச் சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது. தற்பொழுது ஒரு மாதம் ஆகியும் பள்ளத்தை மூடாமல் அப்படியே விடப்பட்டுள்ளதால், ஏராளமான வாகன ஓட்டிகளும், அப்பகுதியில் வசிக்கும் மக்களும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மேலும், பள்ளிகளுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்ல முடியாமலும், முதியவர்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமலும் அவதிக்குள்ளாகி வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர். இந்த பணியை அப்பகுதியைச் சேர்ந்த திமுக பிரமுகர் கண்ணன் என்பவர் ஒப்பந்தம் எடுத்துள்ளதால், அராஜகத்தில் ஈடுபட்டு வருவதாகவும், உடனடியாக இந்த பள்ளத்தை மூட வேண்டும், இல்லையென்றால் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் இந்த பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள் வாக்களிக்க மாட்டோம் என்றும் அறிவித்துள்ளனர்.
அதுமட்டுமின்றி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் முதலமைச்சரின் தனிப்பிரிவு என பல்வேறு பகுதிகளுக்கும் இதுதொடர்பாக புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டை வைக்கின்றனர்.