சென்னை: அறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் செப்டம்பர் 15ஆம் தேதி மற்றும் தந்தை பெரியாரின் பிறந்த நாள் செப்டம்பர் 17 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. எனவே, திமுக சார்பில் ஆண்டுதோறும் செப்டம்பர் 15, 17 ஆகிய தேதிகளில் அண்ணா பிறந்த நாள், பெரியார் பிறந்த நாள் மற்றும் திமுக தொடங்கப்பட்ட நாள் ஆகியவற்றை முன்னிட்டு முப்பெரும் விழா கொண்டாடப்படுவது வழக்கம்.
அந்தவகையில் இந்த ஆண்டு திமுக பவள விழா ஆண்டு முப்பெரும் விழா வரும் செப்டம்பர் 17 ஆம் தேதி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ அரங்கில் நடைபெறுகிறது. திமுகவின் முக்கிய விழாக்களில் ஒன்றாக இருக்கும் இந்த முப்பெரும் விழாவில், தமிழ் அறிஞர்கள், தமிழ்ச் சமூகத்திற்குத் தொண்டாற்றியவர்கள் ஆகியோர் கவுரவிக்கப்படுவார்கள்.
இந்த முப்பெரும் விழாவில் பெரியார், அண்ணா, கலைஞர், பாவேந்தர், பேராசிரியர் ஆகிய தலைவர்களின் பெயர்களில் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், திமுக பவள விழா ஆண்டு முப்பெரும் விழாவையொட்டி விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
இதுதொடர்பாக திமுக தலைமைக் கழகம் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “2008 ஆம் ஆண்டு முதல் புரட்சிக்கவிஞர் பாவேந்தர் விருதும், 2018 ஆம் ஆண்டு முதல் இனமானப் பேராசிரியர் விருதும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், திமுக தனது 75 ஆண்டு பவள விழாவில் ‘மு.க. ஸ்டாலின்’ விருதினை இந்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்துகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான மு.க.ஸ்டாலின் விருது, தஞ்சை எஸ் எஸ் பழனிமாணிக்கத்திற்கு வழங்கப்படுகிறது” இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: திமுக பவளவிழா: "இல்லந்தோறும் கழகக்கொடி பறக்கட்டும்" - மு.க.ஸ்டாலின் போட்ட உத்தரவு!