திருவள்ளூர்: தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகள் உட்பட 21 மாநிலங்களின் 102 தொகுதிகளில் வரும் 19-ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அந்தந்த கட்சியின் மூத்த தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
அந்தவகையில், திருவள்ளூர் நாடாளுமன்ற தனித் தொகுதியில், திமுக தலைமையிலான கூட்டணி சார்பாக போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலை ஆதரித்து பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டு வேட்பாளருக்கு ஆதரவு திரட்டி, பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், "கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி அவிழ்த்து விடும் பொய்களை தமிழ்நாட்டு மக்கள் நம்பி ஏமாற்றம் அடைய மாட்டார்கள். இந்தியா முழுவதும் ஆட்சி மாற்றம் ஏற்படும் சூழல் பிரகாசமாக உள்ளது. தமிழ்நாட்டில் திமுக கூட்டணி மிகப்பெரிய வளர்ச்சி கூட்டணியாக ஆதரவு பெற்றிருப்பதால் அதனைக் கண்டு பிரதமர் மோடிக்கு காய்ச்சல் வந்துவிட்டது.
உத்தர பிரதேச மாநிலத்தில் ராகுல் காந்தியும், அகிலேஷ் யதாவும் ஒன்றிணைந்து நடை பயணம் சென்றனர். இதன் விளைவாக அப்பகுதியில் நிச்சயம் 60 நாடாளுமன்ற தொகுதிகளை 'இந்தியா' கூட்டணி (INDIA Alliance) கைப்பற்றும். அதேபோல், பீகார் மாநிலத்திலும் 35 இடங்கள் வரை வெள்ளும், பாஜக இரண்டு இடங்களில் மட்டுமே வெல்ல முடியும்.
மேலும், குஜராத்தில் இந்தியா கூட்டணியில் இருக்கும் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாகவும் கருத்துக் கணிப்புகள் வந்துள்ளது. எனவே, நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (NDA), 150 முதல் 160 இடங்கள் மட்டுமே வெற்றி பெற முடியும்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "அமெரிக்கா கடந்த 2016ஆம் ஆண்டு பிஜேபி ஆட்சிக்கு வரும் என்று கூறியிருந்தது. ஆனால் தற்போது பிரதமர் மோடியின் ஆட்சி ஒழிய வேண்டும் என சொல்கிறது. அப்படி என்றால், இந்த முறை பிரதமர் மோடி ஆட்சி தோற்கடிக்கப்பட்டு, காங்கிரஸ் ஆட்சிக்கு வருவது உறுதி. அதேபோல், திருவள்ளுர் நாடாளுமன்ற வேட்பாளரும், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியுமான சசிகாந்த் செந்தில் வெற்றி பெற்று மத்திய அமைச்சர் ஆகப்போவதும் உறுதி" என்று கூறினார்.
இதையும் படிங்க: "திமுக பாஜக ஆகிய கட்சிகளை அடிக்கக்கூடிய ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி" - மத்திய சென்னை நதக வேட்பாளர்!