கடலூர்: தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தாதாகக் கூறி, தமிழக அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது தொடர்பாக, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது பேசிய அவர், "அரசியலில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக, திமுக மீது போதைப்பொருள் குற்றச்சாட்டை எடப்பாடி பழனிசாமி வைத்துள்ளார். தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் என்ற பெயரில், ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் என்ன என்பதை அவர் தெளிவுபடுத்தி இருக்க வேண்டும்.
இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ்கின்றது. இதனை அவரால் தாங்கிக் கொள்ள முடியாமல்தான் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. பாஜக தலைவர் அண்ணாமலை தமிழகத்தில்தான் ஏதோ போதை அதிகமாக இருப்பதாகக் கூறுகிறார்.
ஒரு விரலில் சுட்டிக்காட்டும்போது, மூன்று விரல் தன்னை சுட்டிக்காட்டும் என்பதை மறந்து விடக்கூடாது. அதானிக்குச் சொந்தமான துறைமுகத்தில் இருந்துதான் இந்தியாவினுடைய மொத்த போதைப்பொருள் கடத்தலும் நடைபெறுகிறது. இந்தியா முழுவதும் போதைப்பொருள் விற்பனை செய்பவர்களே பாஜகவினர்தான் என்பதை என்னால் ஆதாரத்துடன் கூற முடியும்" என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "அதிமுக ஆட்சியில் டிஜிபி மற்றும் விஜயபாஸ்கர் மீது குட்கா வழக்குப் பதிவு செய்யப்பட்டதை மறந்துவிட்டார்கள். திமுகவின் மீது தற்பொழுது திசை திருப்பி வருகின்றார். யாரோ ஒருவர் செய்திருக்கிறார் என்பதற்காக, உடனடியாக அவர் 24 மணி நேரத்திற்குள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்த நிலையில், இதுவரையும் விஜயபாஸ்கர் மீதும், டிஜிபி மீது எடப்பாடி நடவடிக்கை எடுத்தாரா? அதிலும் குறிப்பாக, திமுக ஐடி அணியினர்தான் இந்த போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடுவதாக பொத்தாம் பொதுவாக எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். இந்த அறிக்கையை இரண்டு நாட்களில் வாபஸ் பெற வேண்டும்.
இல்லையென்றால், திமுக ஐடி அணியினர் தரப்பில் வழக்குப் பதிவு செய்யப்படும். மேலும், ஐடி வல்லுநர்களை இழிவுபடுத்தியதற்கு அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். இதுமட்டுமல்லாது, இந்தியா முழுவதும் போதைப்பொருள் கடத்துபவர்கள் பட்டியல் என்னிடம் உள்ளது. பாஜக தலைவர்கள் யார் யார் உள்ளனர், எந்த மாநிலத்தில் இருந்து போதைப்பொருள் கடத்துகின்றனர் என்ற பட்டியல் உள்ளது" என்று கூறினார்.
இதையும் படிங்க: மதுரையில் பிரதமர் மோடியை சந்தித்தது ஏன்? - அமைச்சர் பிடிஆர் அளித்த விளக்கம்!