சென்னை: கடந்த ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி தாம்பரம் ரயில் நிலையத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்தனர். இதனை ரயிலில் கொண்டு வந்ததாக நவீன், சதீஷ், பெருமாள் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டு தாம்பரம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில் திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான பணம் எனவும், அவரது ஹோட்டலில் இருந்து தேர்தல் செலவுக்காக கொண்டு செல்லப்படுவதாகவும், இந்த பணம் சென்னையில் பல்வேறு இடங்களில் கைமாறிக் தற்போது ரயிலில் கொண்டு செல்ல திட்டமிட்டிருந்ததாகவும் வாக்குமூலம் அளித்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கின் தீவிர தன்மையை கருத்தில் கொண்டு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கின் ஆவணங்களை பெற்று இதில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் சம்மன் அனுப்பி நேரில் வரவழைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இது தொடர்பாக சில இடங்களில் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றியுள்ளனர். இதுவரை இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியே வந்த நவீன், சதீஷ் பெருமாள் உட்பட 15க்கும் மேற்பட்ட நபர்களுக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி நேரில் வரவழைக்கப்பட்டு இந்த பணம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் விசாரணைகள் அனைத்தையும் வீடியோ பதிவு செய்துள்ளனர்.
இவர்கள் அளித்துள்ள வாக்குமூலங்களை அடிப்படையாக வைத்து தற்போது நெல்லை நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன், தமிழ்நாடு பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம், பாஜகத் தொழில் பிரிவு நிர்வாகி கோவர்தன் மற்றும் நயினார் நாகேந்திரனின் உதவியாளர் மணிகண்டன் ஆகிய நான்கு பேரிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அந்த சம்மனில் இவர்கள் நான்கு பேரும் நாளை மறுநாள் 31ஆம் தேதி காலை 10 மணியளவில் சென்னை எழும்பூர், சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் ஆஜராகி இந்த வழக்கு தொடர்பாக விளக்கங்கள் அளிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள் அளிக்கும் வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த வழக்கில் அடுத்து கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சிபிசிஐடி அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.