சென்னை: வெளிநாடுகளில் இருந்து போதைப் பொருட்கள், தங்கக் கட்டிகள், அரியவகை விலங்குகள் உள்ளிட்டவற்றை விமான மூலம் சென்னைக்கு கடத்தி வரும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது போன்ற பொருட்களை பறிமுதல் செய்யும் விமான நிலைய அதிகாரிகள், கடத்தலில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுத்தாலும் இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவது தொடர்கதையாகி வருகிறது.
இந்தநிலையில் சென்னைக்கு வெளிநாடுகளில் இருந்து மிகப்பெரிய அளவில் போதைப்பொருள் கடத்தி வருவதாக மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து மத்திய வருவாய் புலனாய் துறை தனிப்படை அதிகாரிகள் இன்று (புதன்கிழமை) அதிகாலையில் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.
அப்போது கத்தார் நாட்டு தலைநகர் தோகாவிலிருந்து தனியார் பயணிகள் விமானம் ஒன்று சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை மத்திய வருவாய் புலனாய் துறை தீவிரமாக கண்காணித்து கொண்டு இருந்தனர்.
அப்போது ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த பாரத் வசித்தா (28) என்ற பயணி, தோகாவிலிருந்து வந்து விட்டு, மற்றொரு விமானத்தில் சென்னையில் இருந்து டெல்லி செல்வதற்காக, டிரான்சிட் பயணியாக விமான நிலையத்திற்குள் அமர்ந்திருந்தார். சந்தேகத்தின் பெயரில் மத்திய வருவாய் புலனாய் துறை அதிகாரிகள் அவரிடம் சோதனை நடத்தினர். அப்போது அவர் வைத்திருந்த பைக்குள் சுமார் ஒரு கிலோ எடையுடைய போதைப்பொருள் இருந்ததை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து மத்திய வருவாய் புலனாய் துறை அதிகாரிகள் அந்த பயனியின் பயணத்தை ரத்து செய்து, தனி அறைக்கு அழைத்து சென்று தீவிரமாக விசாரணை நடத்தினர். அப்போது அந்தப் பயணி வைத்திருந்தது ஹெராயின் போதைப் பொருள் என்றும் முதலில் கூறப்பட்டது.
ஆனால் அதிகாரிகள் அந்த போதை பொருட்களை பரிசோதித்த போது, அது மிகவும் விலை உயர்ந்த கொக்கைன் போதைப் பொருள் என்று தெரியவந்தது. அதன் மதிப்பு சுமார் ரூ.28 கோடி வரை இருக்கலாம் என்று தெரிய வருகிறது.
இதையடுத்து மத்திய வருவாய் புலனாய் துறை அதிகாரிகள் அந்தப் பயணியை கைது செய்து மேலும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாரிகள் நடத்திய விசாரணையில் ராஜஸ்தானை சேர்ந்த இந்த பயணி சர்வதேச போதைப் பொருள் கடத்தும் கும்பலை சேர்ந்தவர் என தெரிய வருகிறது.
இதையும் படிங்க: திருமணத்தின்போது மின்சாரம் தாக்கி மணமகன் உயிரிழப்பு.. ராஜஸ்தானில் சோகம்!