ராணிப்பேட்டை: அரக்கோணம் ரயில்வே பாதுகாப்பு படையில் (ஆர்பிஎப்) ஏட்டாக வின்சென்ட் என்பவர் பணியாற்றி வருகிறார். இவரது சொந்த ஊர் திருச்சி. இவர் இந்து மதத்தில் இருந்து கிறிஸ்தவராக மதம் மாறியதாக கூறப்படுகிறது. வின்சென்ட் தற்போது திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராமில் தங்கியபடி அரக்கோணத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், வின்சென்ட் திடீரென அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷனில் உள்ள பிஎஸ்என்எல் செல்போன் டவர் மீது 150 மீட்டர் உயரத்தில் ஏறி நின்று பேனர் ஒன்றை பிடித்தபடி நூதன போராட்டம் நடத்தினார்.
இந்த சம்பவம் ரயில் பயணிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வழியாக சென்ற பயணிகள் மற்றும் ரயில்வே போலீசார், ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் ஆகியோர் வின்சென்ட்டை கீழே இறங்குமாறு பல தடவை கூச்சலிட்டும் அவர் கீழே இறங்கி வரவில்லை.
இதற்கிடையே, வின்சென்ட் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் இங்கு வரவேண்டும் என்று கோரிக்கை வைத்தார். பின்னர் அரக்கோணம் ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் உஸ்மான் மற்றும் அரக்கோணம் டவுன் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் அங்கு வந்து, '' தங்களின் கோரிக்கையை நிறைவேற்ற தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் .. உங்கள் கோரிக்கை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்காகவே அனைத்து மீடியாக்களும் இங்கு வந்துள்ளன. கீழே இறங்கி வாருங்கள்'' என்று தெரிவித்தனர்.
அதன்பேரில் நூதன போராட்டம் நடத்திய ஏட்டு வின்சென்ட் செல்போன் டவரில் இருந்து கீழே இறங்கி வந்தார். 2 மணி நேரமாக அவர் போராட்டம் நடத்திய நிலையில் கீழே இறங்கி வந்த ஏட்டு வின்சென்ட் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:
எந்த சலுகையும் வேண்டாம்: ''எனக்கு சாதி வேண்டாம்... எனக்கு எந்தவித சலுகையும் வேண்டாம்.. 'சாதியற்ற கிறிஸ்தவர்' என்று சாதி சான்றிதழ் தருமாறு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் உட்பட அனைத்து நிலை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எனக்கு சாதி சான்றிதழ் கிடைக்கவில்லை... முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கு என்னுடைய பிரச்சனையை கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காகவே செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்தினேன்... அப்படியும் என்னுடைய பிரச்சனை தீராவிட்டால் மனுதர்ம சட்டத்தை எரிப்பேன்... நான் சட்டப்படி போராடிவிட்டேன்.. எனக்கு இதை விட்டால் வேறு வழி தெரியவில்லை'' என்றார்.
ரயில்வே போலீசார் நூதன போராட்டம் நடத்திய ஏட்டு வின்சென்ட்டை ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். அதன்பிறகே அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நான் விரும்பியவருடன் வாழ்வேன்..” 3வது கணவரைத் தேடிச் சென்ற பெண்.. 2வது கணவர் அளித்த புகாரில் சிக்கியது எப்படி?