சென்னை: சென்னையில் கடந்த மாதம் பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 27 நபர்களை செம்பியம் தனிப்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்தக் கொலை வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் ரவுடி சம்போ செந்தில், சீசிங் ராஜா, வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணன் ஆகிய மூவரையும் செம்பியம் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்தக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நபர்களுடன் தொடர்பில் இருந்த 200க்கும் மேற்பட்ட நபர்களிடம் செம்பியம் தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கைது செய்யப்பட்டுள்ள ரவுடிகள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்த ரவுடிகளையும் கண்காணித்து அவர்களையும் கைது செய்து விசாரணை செய்யும் நடவடிக்கையிலும் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் ரவுடி சீசிங் ராஜாவின் நெருங்கிய கூட்டாளியும், சரித்திரப் பதிவேடு குற்றவாளியுமான ரவுடி சஜித் என்பவரை தாம்பரம் காவல் உதவி ஆணையர் தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சஜித் மீது 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது.
மேலும் விசாரணையில், ரவுடி சஜித் காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் ஆராமுதன் கொலை வழக்கில் ஈடுபட்ட குற்றவாளிகளுடன் தொடர்பில் இருந்து வந்ததும், செங்கல்பட்டு நீதிமன்றம் அருகே இளைஞர் கொலை செய்யப்பட்ட குற்றவாளிகளுடன் தொடர்பில் இருந்து வந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது மட்டுமல்லாமல், ரவுடி சஜித் போதை மாத்திரை விற்பனையிலும் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும், சஜித்திடம் தாம்பரம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடையவராக கூறப்படும் ரவுடி சீசிங் ராஜா தொடர்ந்து தலைமறைவாக இருந்து வரும் நிலையில் இவருக்கும், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் தலைமறைவாக இருந்து வரும் சீசிங் ராஜாவுடன் சஜித் தொடர்பில் உள்ளாரா? அவர் பதுங்கி இருக்கும் இடம் ஏதாவது இவருக்கு தெரியுமா? செல்போனில் ஏதாவது தொடர்பு கொண்டு பேசி உள்ளார்களா? என பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ரவுடி சஜித்தை கைது செய்தபோது, அவரிடமிருந்து பட்டா கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்ததாக தெரிவித்துள்ளனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: ஜெயிலில் இருந்த கைதி திருமலைக்கு திடீர் நெஞ்சுவலி.. நடந்தது என்ன? - Armstrong Murder Case