கடலூர்: கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் உள்ள வாகீச நகர் கோயில் தெரு பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருபவர் சர்புதீன். இவரது மளிகைக் கடைக்கு முன்பாக பள்ளி மாணவர்கள் நின்று கொண்டிருந்துள்ளனர். அப்போது, அதேபகுதியில் கோவிந்தசாமி தெருவைச் சேர்ந்த ராகுல்(28), கௌசிக் என்ற கௌசிலன் ஆகிய இருவரும் இரு சக்கர வாகனத்தில் அதிவேகமாகச் சென்றதாகக் கூறப்படுகிறது.
அதைக் கண்ட சர்புதீன் "மாணவர்கள் நிற்கிறார்கள், இவ்வளவு வேகமாக எதற்கு" என்று கேட்டதாகவும், அதனால் கோபமடைந்த ராகுல் மற்றும் கௌசிக் கடைக்காரரிடம் வந்து, கத்தியைக் காட்டி மிரட்டி "பெட்ரோல் ஊற்றி பிளாஸ்ட் செய்துவிடுவேன்" எனக் கொலை மிரட்டல் விட்டதாகவும் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து வாக்குவாதம் முற்றிய நிலையில், அருகிலிருந்த நபர்கள் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர்.
இதற்கிடையே, கூட்டத்திலிருந்த ஒருவர் இந்த ரவுடிகள் பேசியதை வீடியோவாக எடுத்து, சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த இணையத்தில் வைரலான நிலையில், கௌஷிக் என்பவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார், தலைமறைவாக உள்ள ராகுலையும் தேடி வருகின்றனர்.
மேலும், ராகுல் இதுபோன்று தொடர் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர். கடலூரில் இதுபோன்று வியாபாரிகளையும், பொதுமக்களையும் ரவுடிகள் கத்தி போன்ற ஆயுதங்களைக் காட்டி அச்சுறுத்தும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், அதனால் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளதாகவும், இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்