சென்னை: சென்னை பூக்கடை விஆர்என் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி (46). இவருக்கு திருமணம் ஆகாததால் தனது தாய் மற்றும் தம்பியுடன் வசித்து வந்தார். பிரபல ரவுடியான இவர் மீது 8 கொலை வழக்கு, கொலை முயற்சி, வெடிகுண்டு வழக்கு என 50க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது.
மேலும், ரவுடி பாலாஜி 12 முறை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறைக்குச் சென்றுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, பிரபல ரவுடி சிடி மணி வழக்கு ஒன்றிற்காக நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு காரில் சென்ற போது, தேனாம்பேட்டை அருகே நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயன்ற வழக்கில், தேனாம்பேட்டை போலீசார் காக்கா தோப்பு பாலாஜியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பின்னர், ஜாமீனில் வெளியே வந்த அவர் தலைமறைவாகி உள்ளார். இருப்பினும், தொடர்ந்து குற்றச் செயலில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால், பாலாஜியை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், சரித்திரப் பதிவேடு குற்றவாளியான காக்கா தோப்பு பாலாஜி, சென்னை வியாசர்பாடி பி.டி குடியிருப்பு பகுதியில் பதுங்கி இருப்பதாக கொடுங்கையூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையும் படிங்க: கொலைக்கு பழி தீர்க்க பேஸ்புக் பதிவு; ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் கைது!
அதன் பேரில், கொடுங்கையூர் காவல் ஆய்வாளர் சரவணன் தலைமையிலான போலீசார், இன்று காலை 4.50 மணியளவில் ரவுடி பதுங்கி இருந்த பி.டி குடியிருப்பைச் சுற்றி வளைத்து கைது செய்து முயன்றனர். அப்போது, போலீசாரைக் கண்டதும் பாலாஜி தாக்குதல் நடத்தி விட்டு தப்பிச் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.
எனவே, காவல் ஆய்வாளர் சரவணன், தற்காப்புக்காக ரவுடி காக்கா தோப்பு பாலாஜியை நோக்கி துப்பாக்கியால் சுட்டதில், இடது மார்பில் துப்பாக்கி குண்டு பாய்ந்து அவர் சம்பவயிடத்திலேயே சரிந்தார். இதனையடுத்து, பாலாஜியின் உடலைக் கைப்பற்றிய போலீசார், ஸ்டான்லி மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.
அப்போது, அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து, ரவுடி காக்கா தோப்பு பாலாஜியின் உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. அதேநேரம், ரவுடி தாக்கியதில் காயமடைந்த காவலர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், இந்த என்கவுண்டர் தொடர்பாக வியாசர்பாடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல், என்கவுண்டர் சம்பவம் நிகழ்ந்த இடத்தை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், காவல்துறை ஆணையராக அருண் பொறுப்பேற்றதிலிருந்து இது இரண்டாவது என்கவுண்டர் ஆகும். இதற்கு முன்னர், பகுஜம் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதா திருவேங்கடம் என்பவர் என்கவுண்டர் செய்யப்பட்டார்.