சென்னை: சென்னை பெரம்பூர் பகுதியில் கடந்த ஐந்தாம் தேதி பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் மொத்தமாக 16 நபர்களை இதுவரை செம்பியம் காவல் நிலைய தனிப் படை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில், கைது செய்யப்பட்ட குற்றவாளிகளை 5 நாட்கள் போலீசார் காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், பல்வேறு தகவல்கள் வெளியாகியது. அதன்படி, பல்வேறு ரவுடிகள் ஒன்றிணைந்து திட்டம் தீட்டி ஆம்ஸ்ட்ராங்கை வெட்டி படுகொலை செய்தது தெரியவந்தது.
அதன் தொடர்ச்சியாக, இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட ஒவ்வொரு நபரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், ஏற்கனவே கைது செய்யப்பட்டு காவலில் எடுத்து விசாரணை நடத்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றம் சுமத்தப்பட்ட சிலரை மீண்டும் போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தத் திட்டமிட்டிருந்தனர்.
அதன் அடிப்படையில், எழும்பூர் நீதிமன்றத்தில் செம்பியம் காவல் நிலைய போலீசார் மனு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தனர். அந்த மனு மீதான விசாரணை இன்று (ஜூலை 22) விசாரணைக்கு வந்தது.
இதற்காக பொன்னை பாலு, ராமு, அருள் மற்றும் கூலிப்படை இடைத்தரகராக செயல்பட்ட ஹரிகரன் ஆகியோரை காவல்துறை வாகனத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உள்ளனர்.
நீதிமன்றத்தில் காவல் துறையினர் தரப்பில், ஏழு நாட்கள் போலீஸ் காவல் கேட்டு மனு அளித்த நிலையில் மனுவை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான வழக்கறிஞர் ஹரிகரனுக்கு 4 நாட்கள் போலீஸ் காவல் வழங்கி உத்தரவிட்டார்.
மேலும், கைதான பொன்னை பாலு, ராமு என்ற வினோத் மற்றும் வழக்கறிஞர் அருள் ஆகியோருக்கு 3 நாட்கள் போலீஸ் காவலும் வழங்கி எழும்பூர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: செந்தில் பாலாஜி நீதிமன்ற காவல் 49வது முறையாக நீட்டிப்பு!