மூணாறு: கேரள மாநிலத்தில் அடித்து பெய்யும் தென்மேற்கு பருவ மழையால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழக - கேரளா எல்லைப் பகுதியான மூணாறில் உள்ள ஹெட்ஒர்க்ஸ் அணை அதன் முழுக் கொள்ளளவை எட்டி தண்ணீர் நிரம்பி வருவதால் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரால் அப்பகுதியில் உள்ள ஆத்துக்காடு, பள்ளிவாசல் பாலம் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது.
மேலும், அப்பகுதியில் உள்ள அனைத்து சாலைகளும் சேதமடைந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அந்த சாலையை பயன்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். அதேபோல், மூணார் பகுதியில் உள்ள மலைச் சாலைகளில் நிலச்சரிவு ஏற்பட்டு பல்வேறு இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று மூணாறில் இருந்து உடுமலை வரும் சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டு சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதேபோல் மூணாறில் இருந்து கொச்சி மற்றும் தேனி செல்லும் சாலைகளும் நிலச்சரிவில் பெரிய அளவில் சேதம் அடைந்து எந்தவித வாகனங்களும் செல்ல முடியாமல் உள்ளது. சுற்றுலா சென்ற வாகனங்கள் மற்றும் உள்ளூர் வாகனங்கள் மூணார் மற்றும் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல முடியாமல் தவித்து வருகின்றன.
உடனடியாக, இடுக்கி மாவட்ட மீட்புப் படையினர் விரைந்து வந்து சாலைகளை சீரமைக்கும் பணியை தொடங்கியுள்ளனர். தொடர்ந்து கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் நிலச்சரிவு ஏற்படும் என்ற அச்சம் அப்பகுதி மக்களிடம் எழுந்துள்ளது. பேரிடர் மீட்புப் படையினர் விரைந்து மூணாறு செல்லும் அனைத்து வழித்தடங்களையும் சீரமைக்க பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இருப்பினும், மூணாறில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், அப்பகுதியில் சேதமடைந்த சாலைகளை சீர் செய்ய முடியாமல் தீயணைப்புத் துறையினர் மற்றும் மீட்புக் குழுவினர் திணறி வருகின்றனர். கடந்த 2020ஆம் ஆண்டு மூணாறு ராஜமலை எஸ்டேட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 70-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகளுக்கு ரெட் அலட்ர்ட்!