ஈரோடு: கோபிசெட்டிபாளையத்தில் சாலை தடுப்புச் சுவர்களுக்கு வர்ணம் பூசுகின்ற வேலைகளைச் செய்யும் பெண் தொழிலாளர்கள், வெயிலின் கொடுமை தாங்காமல் தங்கள் தலையில் வேப்பமர இலைகளை வைத்துக் கொண்டு பணிகளைச் செய்து வருகின்றனர்.
ஆண்டுதோறும் வெயிலின் தாக்கம் சிறிது சிறிதாக அதிகரித்து வந்த நிலையில், இந்த ஆண்டு மார்ச் மாத தொடக்கத்திலேயே வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. இந்திய அளவில் 109 டிகிரி செல்சியஸ் வெப்பத்துடன் தமிழ்நாட்டில் உள்ள ஈரோடு மாவட்டம் இந்திய அளவில் மூன்றாவது இடத்தையும், மாநில அளவில் முதலிடத்தையும் பெற்றுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் பவானி ஆறு, காவிரி ஆறு உள்ளிட்ட ஆறுகளும், பவானிசாகர், கொடிவேரி அணை, குண்டேரிப்பள்ளம் அணை, பெரும்பள்ளம் அணை என பல்வேறு அணைகளும், காலிங்கராயன் அணைக்கட்டு, குளங்கள், ஏரிகள் என நீர்நிலைகள் அதிகமாக உள்ள மாவட்டமாக இருப்பதால், பல லட்சம் ஏக்கரில் விவசாயமும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கோபிசெட்டிப்பாளையம் பகுதியில் சாலை விரிவாக்கப் பணிகள் ஓரளவு முடிவுற்ற நிலையில், சாலையின் நடுவே அமைக்கப்பட்ட தடுப்புச் சுவரில் வெள்ளை வர்ணம் பூசும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. வர்ணம் பூசும் பணியில் பவானி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 15க்கும் மேற்பட்ட பெண்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
காலை 9 மணிக்கே வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ள நிலையில், வர்ணம் பூசும் வேலையில் ஈடுபட்டு வரும் பெண் தொழிலாளர்கள் வேலை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. விவசாயக் கூலி வேலை செய்து வந்த இவர்களுக்கு, தற்போது விவசாய வேலைகளும் கிடைக்காத நிலையில், இந்த வேலை செய்வதால் கிடைக்கும் கூலியை வைத்தே பிழைப்பு நடத்த வேண்டிய நிலையில், வேப்ப மர இலைகளைத் தலையில் வைத்து வேலை செய்து வருகின்றனர். பசுமையான வேப்ப மர இலைகளைத் தலையில் சொருகி வைத்தால், வெயிலின் தாக்கம் சிறிது குறைவாக இருப்பதாகத் தொழிலாளர்கள் கூறுகின்றனர்.
சித்தோட்டில் இருந்து கோபி வரை உள்ள 30 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை விரிவாக்கப் பணிக்காக மரங்கள் வெட்டப்பட்டுள்ளது. மேலும், வேப்ப மரம், புங்கைமரம், ஆலமரம், அரச மரம் போன்ற நாட்டு மரங்கள் வெப்பத்தைக் குறைக்கும் என்பதால், புதிதாக அமைக்கப்பட்டுள்ள சாலையோரம் புதிய மரங்களை நட்டு வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியிலுள்ள சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
இதையும் படிங்க: கிராண்ட் மாஸ்டர் குகேஷிற்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை வழங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்! - Cm Gave 75 Lakhs To Gukesh