ஈரோடு: தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் இயங்கி வரும் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் இன்று (பிப்.13) ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிக்கப்பட்டதையடுத்து, ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா அருகே உள்ள வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடைபெற்றது.
இதன் ஒரு பகுதியாக, ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம், பவானிசாகர், கோபிசெட்டிபாளையம், பவானி, அந்தியூர், பெருந்துறை, கொடுமுடி, மொடக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு வருவாய் கோட்ட பகுதியில் பணியாற்றி வரும் வருவாய்த்துறை அலுவலர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர்.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில்,
- துணை வட்டாட்சியர் பட்டியல் திருத்தத்தின் காரணமாக, பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பணியிறக்கப் பாதுகாப்பு அரசாணையினை தமிழக அரசு உடனே வெளியிட வேண்டும்.
- இளநிலை வருவாய் ஆய்வாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்ற அரசாணையின் அடிப்படையில், விதித் திருந்த அரசாணை உடன் வெளியிட வேண்டும்.
- வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அலுவலர்களின் பணித்தன்மையை கருத்தில் கொண்டு, அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் தனி ஊதியம் வழங்கிட வேண்டும்.
- இளநிலை உதவியாளர், தட்டச்சர் ஆகியோருக்கு இடையே ஒருங்கிணைந்த முதுநிலை நிர்ணயம் செய்வதில் ஏற்படுத்தப்பட்டுள்ள குளறுபடிகளை சரி செய்திட மனித வள மேலாண்மைத் துறை மூலமாக உரிய தெளிவுரை வழங்க வேண்டும்.
- வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை உடனே நிரப்பிட வேண்டும்.
- அனைத்து வட்டங்களிலும் சான்றிதழ் வழங்கும் பணிக்கென புதிய துணை வட்டாட்சியர் பணியிடங்களை உடனே ஏற்படுத்திட வேண்டும்.
- அனைத்து மாவட்டங்களிலும் பேரிடர் மேலாண்மை பணிக்கென சிறப்பு பணியிடங்கள் மற்றும் பேரிடர் மேலாண்மைப் பிரிவில் 31.3.2023 முதல் கலைக்கப்பட்ட 97 பணியிடங்களை மீண்டும் வழங்கிட வேண்டும்.
- வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் உள்ள பயன்பாட்டிற்கு தகுதியற்ற ஈப்புகளை கழிவு செய்து அவற்றிற்கு ஈடாக புதிய ஈப்புகளை உடனடியாக வழங்கிட வேண்டும்.
- 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் பணிகளை தொய்வின்றி மேற்கொள்ள முழுமையான நிதி ஒதுக்கீட்டினை உடனே வழங்க வேண்டும்.
- 'உங்கள் ஊரில் உங்களைத் தேடி மக்களுடன் முதல்வர்' மற்றும் 'மக்களின் முகவரி' போன்ற அரசின் திட்டப் பணிகளை, அதீத பணி நெருக்கடி அளிக்கப்படுவதை தவிர்த்து, திட்டப் பணிகளை செம்மையாக மேற்கொள்ள உரிய கால அவகாசம் மற்றும் நிதி ஒதுக்கீடு ஆகியவற்றை தமிழக அரசு வழங்கிட வேண்டும்.
உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மாவட்டம் முழுவதிலும் இருக்கும் வருவாய்த்துறை அலுவலர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்று கோரிக்கை முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்டம் முழுவதும் வருவாய்த்துறை அதிகாரிகள் உண்ணாவிரதப் போராட்டம் காரணமாக, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் நலப் பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டது. பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான சான்றிதழ் போன்றவற்றை உரிய நேரத்தில் கிடைக்காததால் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அதனால், இது குறித்து தமிழக அரசு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதையும் படிங்க: கோவை மக்களின் குடிநீர் பிரச்னைக்கான தீர்வு என்ன? - சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என் நேரு பதில்!