வேலூர்: அரசுக்கு சொந்தமான இடத்தில் அனுமதியின்றி சாமி சிலை வைத்ததால், வருவாய்த்துறையினர் சாமி சிலையை அகற்றியுள்ளனர். இதனால், அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் சாமி ஆடி சிலையை அகற்றக்கூடாது என வாக்குவாததில் ஈடுபட்டுள்ளனர். அனுமதியின்றி சிலை வைத்து வழிபாடு செய்ததால் சிலையை அகற்றியுள்ளதாக காட்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் பழனி தெரிவித்துள்ளார்.
காட்பாடி அடுத்த எல்.ஜி.புதூர் பகுதியில் பொன்னியம்மன் கோயில் சுமார் 20 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டு அப்பகுதி மக்களால் வழிபாடு செய்யப்பட்டு வருகின்றது. இந்த நிலையில், அக்கோயிலுக்கு எதிர்பகுதி இடத்தில், வேறொரு பொன்னியம்மன் சிலையை வைத்து அப்பகுதி மக்கள் வழிபட முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. அது வருவாய் துறைக்கு சொந்தமான இடம் என்பதால், வருவாய்த் துறையினர், இன்று, சனிக்கிழமை (நவ.22) அப்பகுதியில் வைக்கப்பட்ட சிலையை கைப்பற்றி எடுத்துச் சென்றுள்ளனர்.
இதனை அறிந்த அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், இந்த இடம் கோயிலுக்கு சொந்தமானது எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், பெண்கள் சிலர் சாமி வந்து ஆடியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, 200க்கும் மேற்பட்ட போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டு, வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த முயற்சி செய்தனர். தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து, திருமண மண்டபத்தில் அடைத்துள்ளனர். சாமி வந்து ஆடிய பெண்கள் மயக்கம் அடைந்து விழுந்த நிலையில், அவர்களை மற்ற பெண்கள் அழைத்துச் சென்றனர்.
இதையும் படிங்க: தஞ்சையில் மெகா வேட்டை... லாரியில் 330 கிலோ கஞ்சா கடத்தல்.. மாஸ்டர் பிளானை தவிடுபொடியாக்கிய தனிப்படை!
இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்தவர் கூறுகையில், “இந்த இடத்தில் சாமி ஜெயிக்கவில்லை, அரசியல்வாதியும், பணமும் தான் ஜெயித்துள்ளது. எங்களுக்கு ஆதார் கார்டு, ரேஷன் அட்டை போன்றவை தேவையில்லை. திருப்பிக் கொடுத்து விடுகிறோம். யாரும் எங்கள் ஊரில் ஓட்டு கேட்டு வரக்கூடாது. உடனடியாக, இந்த விவகாரத்தில் அமைச்சர் தலையிட்டு இந்த பிரச்சினையை தீர்க்க வேண்டும். இல்லை என்றால் நாங்கள் வாக்களிக்க மாட்டோம்” என்று தெரிவித்தனர்.
இந்த கோயிலை ஒட்டியுள்ள இடம் மற்றும் கோயில் அமைந்துள்ள இடம் இரண்டுமே அரசுக்கு சொந்தமான இடம் என்று வருவாய் துறையினரால் கூறப்படுகிறது. மேலும், இந்த கோயில் நிலத்தை தாண்டி செல்லும் இடத்தில் வேறு ஒரு தனி நபருக்கு சொந்தமான இடம் வீடு கட்டுவதற்கு மனைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அதற்கு செல்லும் வழியில் சிலையும், கோயில் சுற்றுச்சுவரும் அமைக்கப்பட்டுள்ளதால், வருவாய் துறையினர் வீட்டுமனை அமைக்கும் நபருக்கு ஆதரவாக செயல்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டுகின்றனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.