தஞ்சாவூர்: தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான பாலசந்திரன், தற்போது பெங்களூரில் வசித்து வருகிறார். சமூகம் சார்ந்த செயல்களில் அக்கறை காட்டுவதுடன், பொது நலன் தொடர்பான தன் கருத்துக்களைத் தொலைக்காட்சிகள் மூலம் வெளிப்படுத்தி வருகிறார். தமிழ் மீது பெரும் பற்றுக்கொண்ட பாலச்சந்திரன் இலக்கியங்களில் புலமை பெற்றவராகவும் திகழ்கிறார்.
அதாவது, பாலச்சந்திரன் பள்ளியில் படிக்கும் போது அவருக்கு தமிழ் பாடம் சொல்லி கொடுத்த தமிழ் ஆசிரியர் ராமசாமி. அவர் இறந்து 7 வருடங்கள் ஆன நிலையில், தனக்கு கல்விக் கண் திறந்த நன்றிக் கடனுக்காக ஆசிரியருடைய குடும்பத்தில் பிள்ளையாக இருந்து அவர்களது தேவைகளை நிறைவேற்றித் தருகிறார்.
ஆசிரியர் ராமசாமியின் மனைவி பட்டு, திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள நேமம் கிராமத்தில் தனது பேரன் சரவணன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், பாலச்சந்திரன் தஞ்சாவூர் வரும் போதெல்லாம் 80 வயதாகும் ஆசிரியர் ராமசாமியின் மனைவி பட்டுவை சந்தித்து காலில் விழுந்து வணங்கி ஆசி வாங்கிச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
இந்த நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன்பு தஞ்சாவூர் வந்த பாலச்சந்திரன் நேமம் கிராமத்திற்குச் சென்று பட்டுவை சந்தித்து வயது முதுமையாலும், மருந்து மாத்திரை வாங்க முடியாமல் அவதிப்பட்டு வருவதையும் அறிந்து பட்டுவின் பேரன் சரவணனிடம் ரூ.45 ஆயிரம் பணம் கொடுத்து கறவை பசு மாடு வாங்கி அதில் வரும் வருமானத்தில் பாட்டியைக் குறைவில்லாமல் கவனித்துக் கொள்ள வேண்டும் என அன்பு காட்டியுள்ளார்.
சுமார் 60 வருடங்களுக்கு முன்பு தனக்கு தமிழ்ப் பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியருடன் தொடர்ந்து தொடர்பிலிருந்து வந்தது மட்டுமல்லாமல், ஆசிரியர் மறைவிற்கு பிறகும் அவரது குடும்பத்தைக் கவனித்து வரும் இந்த செயலை அப்பகுதியினர் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.