சென்னை: 2 நாள் நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று அரசினர் தனித்தீர்மானத்தை அவை முன்னவரான அமைச்சர் துரைமுருகன் கொண்டு வந்தார். தீர்மானத்தை வாசித்த அவர், " மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் நாயக்கர்பட்டி கிராமத்தில்டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான உரிமத்தை இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது. இத்தகைய உரிமங்களை மாநில அரசுகளின் ஒப்புதல் இன்றி ஏலம் விடக் கூடாது என ஏற்கெனவே வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த சுரங்கத்திற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடம் பல்லுயிர் பெருக்கத் தலமாக 2022ம் ஆண்டு தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது." என கூறினார்.
இவற்றையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அனுமதி அளித்திருப்பதை தமிழ்நாடு அரசும், மக்களும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் எனவும் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. இப்பகுதியில் வாழும் மக்களின் வாழ்வாதாரம் நிரந்தரமாக பாதிக்கப்படும் என்ற அச்ச உணர்வை மத்திய அரசின் நடவடிக்கை ஏற்படுத்தியுள்ளதால், இப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக போராட்டங்களை மேற்கொண்டு வருகிறார்கள் எனவும் துரைமுருகன் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியிடம் வலியுறுத்தியது குறித்தும் விளக்கப்பட்டுள்ளது. எனவே இந்துஸ்தான் ஜிங்க் லிமிட்டட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய தமிழக வாழ்வுரிமைக் கட்சியைச் சார்ந்த எம்.எல்.ஏ.வான வேல்முருகன், இப்பகுதியில் உள்ள மாங்குளம் கல்வெட்டுதான் தமிழ்ச் செம்மொழியாக அங்கீகரிக்கப்படுவதற்கான வரலாற்று ஆவணமாக இருந்துள்ளது என குறிப்பிட்டார்.
டங்ஸ்டன் சுரங்கம் போன்று, கனிமவளங்ளைத் தோண்டியெடுக்கும் சுரங்கங்களுக்கு மாநில அரசுகளின் அனுமதியின்றி ஏலம் விடவோ அல்லது உரிமம் வழங்கவோ கூடாது என்று தொடர்ந்து மாண்புமிகு முதல்வர் தலைமையிலான கழக அரசு எதிர்த்து வருகிறது.
— Thangam Thenarasu (@TThenarasu) December 9, 2024
2023ஆம் ஆண்டு அதற்கான சட்டத்திருத்தம் மேற்கொள்ளும் போதும் கூட… pic.twitter.com/tNyy5aQ50B
இத்தீர்மானத்தின் மீது பேசிய கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியைச் சார்ந்த எம்.எல்.ஏவான கொங்கு ஈஸ்வரன், தீர்மானத்தை முழுமையாக ஆதரிப்பதாகக் கூறினார். மதம் சார்ந்த கோவில்கள் நிறைந்த பகுதியாக டங்ஸ்டன் சுரங்கத்திற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடம் உள்ளது என்றார். எந்த மதத்தின் கோயில்களை காப்பாற்றுகிறது என ஒன்றிய அரசு சொல்கிறதோ, அதே மதத்தின் கோயில்களை அழிப்பதற்கு இந்த திட்டம் கொண்டு வரப்படுகிறது எனவும் குற்றம் சாட்டிய அவர், ராமர் பாலத்திற்கு ஒரு நிலைப்பாடு அரிட்டாப்பட்டி கோயில்களுக்கு ஒரு நிலைப்பாடா? என கேள்வி எழுப்பினார்.
மார்க்சிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை பேசுகையில், அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைத்தால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படும் என குறிப்பிட்டதோடு, இச்சுரங்கத்திற்கு எதிரான மக்களின் போராட்டத்தை கருத்தில் கொண்டு ஏலத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இதே போன்று மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளும் இத்தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்தன. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன் பேசுகையில், தமிழ்நாடு அரசின் தீர்மானத்தில் சமணப்படுகை என்ற சொல்லுக்கு பதிலாக பஞ்ச பாண்டவர் படுகை என்ற சொல் இருப்பதாகவும், இதனை மாற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.
அதிமுக சார்பிலும் சிறிய வாதத்திற்குப் பின்னர் இந்த தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்த நிலையில், டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்படுவதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.