புதுச்சேரி: நேற்று மாலை புதுச்சேரி பகுதியில் இளைஞர் ஒருவர் 4 பேர் கொண்ட கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில், கொலை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சுமார் 300க்கும் மேற்பட்டோர் சோனாம்பாளையம் பகுதியில் இன்று (மே 30) சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி வம்பாக்கீரப்பாளையம் பகுதியில் விக்கி என்ற இளைஞர், 4 பேர் கொண்ட கும்பலால் நேற்று (மே 29) மாலை அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக ஒதியஞ்சாலை போலீசார், அதே பகுதியைச் சேர்ந்த 4 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில், உயிரிழந்த விக்கியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், இன்று காலை ஆத்திரத்தில் கொலை செய்ததாக கூறப்படும் நபர்களின் வீடுகளை அடித்து சூறையாடினர். மேலும், அவர்களது கார் மற்றும் பைக்குகளையும் அடித்து நொறுக்கினர்.
இதனையடுத்து, அவரது உடலை வாங்க மறுத்த உறவினர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட சுமார் 300க்கும் மேற்பட்டோர், கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சோனாம்பாளையம் சந்திப்பில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் அதனை ஏற்க மறுத்த உறவினர்கள், தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பதட்டமான சூழல் நிலவியது.
இதையடுத்து மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் மற்றும் அதிமுக மாநிலச் செயலாளரும், தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான அன்பழகன் நேரில் சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் கொலை செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
இந்த சாலை மறியல் போராட்டத்தால் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும், அந்தப் பகுதியில் பதட்டமான சூழல் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.