திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட இளம் பெண்ணிற்கு, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் முறையாக சிகிச்சை அளிக்காததால் இளம்பெண் உயிரிழந்ததாக கூறி, அவரது உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆம்பூர் அடுத்த எல்.மாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் விஜய். இவரது மனைவி துர்காதேவி (25). இவர்கள் காதலித்து கலப்பு திருமணம் செய்து 1 வருடம் ஆகியுள்ள நிலையில், துர்காதேவி முதல் பிரசவத்திற்காக கடந்த ஞாயிற்றுகிழமை (நவ.10) ஆம்பூர் அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பணியில் இருந்த மருத்துவர் மற்றும் செவிலியர்கள் சிகிச்சை அளித்துள்ளனர்.
இதில், அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என்றும் குழந்தை திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் மிக மோசமான நிலையில் இன்குபேட்டரில் வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், சிகிச்சையில் துர்காதேவிக்கு அதிக அளவு ரத்தபோக்கு ஏற்பட்டுள்ள நிலையில், அவரை மருத்துவர்கள் திருப்பத்தூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கும் சிகிச்சை அளிக்க முடியாமல், மருத்துவர்கள் துர்காதேவியை சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று (நவ.13) துர்கா தேவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனை தொடர்ந்து துர்காதேவியின் உடல் இன்று (நவ.14) எல்.மாங்குப்பத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆம்பூர் அரசு மருத்துவமனையில் துர்கா தேவி அனுமதிக்கப்பட்ட போது, அவருக்கு முறையான சிகிச்சை அளிக்காததால் அவர் உயிரிந்ததாக கூறி, ஆம்பூர் அரசு மருத்துவமனை மருத்துவர் மீது உரிய நடவடிக்கை எடுக்ககோரி துர்காதேவியின் உறவினர்கள் ஆம்பூர் - பேர்ணாம்பட் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: தங்கை கண் முன்னே சடலமான கல்லூரி மாணவி.. நெல்லையில் நெஞ்சை உலுக்கிய சோக விபத்து..!
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்பூர் துணை காவல் கண்காணிப்பாளர் அறிவழகன் தலைமையிலான காவல்துறையினர், ஆம்பூர் வட்டாச்சியர் ரேவதி தலைமையிலான வருவாய்துறையினர் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட சுகாதார துறை இணை இயக்குநர் கண்ணகி ஆகியோர் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து, இது குறித்து புகார் அளித்தால், துர்காதேவியிற்கு மருத்துவம் பார்த்த மருத்துவர் மற்றும் செவிலியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளனர். போலீசார் உறுதியளித்தனின் பேரில் போராட்டத்தில் ஈடுப்பட்ட உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றுள்ளனர்.
மேலும், இது குறித்து மாவட்ட மருத்துவ அலுவலர் கண்ணகியிடம் கேட்டபோது, "துர்காதேவியிற்கு மருத்துவம் அளித்த ஆம்பூர் அரசு மருத்துவமனை மருத்துவர் செவிலியர்கள் மற்றும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனை மருத்துவர்களிடம் உரிய விசாரணை மேற்க்கொண்டு இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்துள்ளார்.
இது குறித்து பெண்ணின் உறவினர்கள் கூறியதாவது, “துர்காதேவி மருத்துமனையில் அனுமதிக்கப்ப நிலையில், மருத்துவர்கள் அவருக்கு முறையான சிகிச்சை வழங்கவில்லை. இதனையடுத்து குழந்தை பிறந்தும் பேச்சு மூச்சு இல்லாமல் இருந்ததால் மேல் சிக்கிச்சைக்கு அடுக்கம்பாரை மருத்துமனைக்கு அழைத்துச் செல்லுமாறு, மருத்துவர்கள் ஒப்புதல் இல்லாமல் செவிலியர்கள் தெரிவித்தனர். அதன் பின்னர், மருத்துவர்கள் திருப்பத்தூர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுக்கள் என்று கூறி அலைக்கழித்துள்ளனர். இந்த மருத்துவமனைகளில் பிரசவத்திற்கு வரும் பெண்களை தகாத வார்த்தைகளால் பேசுகின்றனர்” இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
குழந்தையும் உயிரிழப்பு: துர்கா தேவி உயிரிழந்த நிலையில், தர்மபுரிஅரசு மருத்துவமனையில் இன்குபேட்டரில் வைத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், பிறந்து மூன்று நாட்களே ஆன அவரது பெண் குழந்தை இன்று சிகிச்சை பலனின்றி இறந்ததாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்