திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம் ஊராட்சி எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்தவர் தனபால் - விஜியா தம்பதி. இவர்களுக்கு கணேஷ், சரவணன் மற்றும் மகேஷ் ஆகிய மூன்று மகன்கள் உள்ள நிலையில், மூன்றாவது மகன் மகேஷ் (30) என்பவர் கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ஒப்பந்த தொழிலாளியாக வெல்டிங் வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில், வழக்கம் போல் நேற்று (ஜூன் 11) காலை வேலைக்குச் சென்று மாலை வீடு திரும்பும் போது மகேஷுக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. உடனடியாக, மகேஷுடன் பணியாற்றும் சக ஊழியர்கள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மகேஷுக்கு மருத்துவர் இல்லாததால், செவிலியரை வைத்து சிகிச்சை அளித்ததாகக் கூறப்படுகிறது. சிகிச்சை அளித்த 10 நிமிடங்களில் மகேஷ் கை மற்றும் கால்கள் இழுக்கப்பட்டு, மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. உடனடியாக, ஆம்புலன்ஸ் மூலம் கும்மிடிப்பூண்டி அரசு பொது மருத்துவமனைக்கு மகேஷ் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மகேஷ் முன்னதாகவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
பின்னர், அங்கிருந்து அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட நிலையில், தவறான சிகிச்சை அளித்ததாகக் கூறி, மகேஷுன் உறவினர்கள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் ஆல்பா தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த சிப்காட் போலீசார், சமரசம் செய்து இருதரப்பினரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதைத் தொடர்ந்து, மருத்துவமனை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: “போக்குவரத்துக் கழகத்தை தனியார்மயமாக்கும் சதியா?” - அன்புமணி ராமதாஸ் கேள்வி! - Anbumani Ramadoss