வேலூர்: வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த சேர்க்காட்டில் தமிழ்நாடு அரசின் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் செயல்படுகிறது. இந்த பல்கலைக்கழகத்தின் கீழ், சேர்க்காட்டிலேயே கடந்த 2022 - 2023ஆம் ஆண்டு புதியதாக கல்லூரி ஒன்று துவங்கப்பட்டது இதில் வேலூர் ராணிப்பேட்டை பகுதிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் இங்கு பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில், அவர்களுக்கான தேர்வு நாளை (ஏப்.26) முதல் துவங்கவுள்ளது. இந்தச் சூழலில், இக்கல்லூரியில் பயிலும் பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு டியூஷன் பீஸ் மட்டும் இலவசம், அதனை அரசு வழங்கும் எனவும், தேர்வுக் கட்டணம் உட்பட பிற கட்டணங்களைச் செலுத்த வேண்டுமென பல்கலைக்கழக நிர்வாகம் நவம்பர் 23ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஆனால், "பட்டியலின, பழங்குடியின மாணவர்களுக்கு அனைத்து கட்டணங்களும் இலவசம் என்பதால், இந்த கல்லூரியில் சேர்ந்து பயில்கிறோம். தேர்வுக் கட்டணம் செலுத்த வலியுறுத்தவில்லை. அதனையும் அரசு தான் கட்டும் என நம்பி இருந்தோம்.
இந்த நிலையில், தற்போது பல்கலைக்கழக நிர்வாகம் தேர்வு நாளை துவங்கவுள்ள நிலையில், ஹால்டிக்கெட் தர மறுக்கின்றனர். எனவே, நாளை நாங்கள் தேர்வு எழுத முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்" என்று கூறி, தங்களது ஹால்டிக்கெட்டை கொடுக்க வேண்டுமென பல்கலைக்கழக வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகள் கூறுகையில், "பல்கலைக்கழக நிர்வாகம் தேர்வுக் கட்டணம் செலுத்தினால்தான் ஹால்டிக்கெட்டை கொடுக்க முடியும், தேர்வு எழுத முடியும் என உறுதியாகக் கூறிவிட்டனர்.
இதுமட்டுமல்லாது, அரசு எங்களுக்கு இலவசம் என எந்த உத்தரவும் போடவில்லை என பல்கலைக்கழக நிர்வாகம் கூறுகிறது. இதனால் இந்த கல்லூரியில் பயிலும் பட்டியலின, பழங்குடியின மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே, அரசு உடனடியாக தலையிட்டு இந்த பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், பல்கலைக்கழக நிர்வாகம் சார்பில் பதிவாளர் செந்தில் வேல்முருகன் கூறுகையில், "தேர்வுக் கட்டணம் எல்லோருமே செலுத்த வேண்டும். யாருக்கும் விதிவிலக்கு அல்ல, அரசு என்ன விதிமுறை சொல்கிறதோ, அதன் படிதான் நாங்கள் செயல்படுகிறோம்" என்று விளக்கமளித்தார்.
இதையும் படிங்க: பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகிறதா? அதிகாரிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை!