மதுரை: சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் செய்திக்குறிப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பேசிய அவர், "திமுக எப்பொழுதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் கடுமையான மின்வெட்டு, மின் கட்டண உயர் போன்றவையின் காரணமாக தமிழ்நாடு மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டதற்கான கடந்த கால வரலாறு இருக்கிறது.
இன்றைக்கு திமுக அரசு சொத்து வரி உயர்வு, குப்பை வரி உயர்வு, குடிநீர் கட்டண உயர்வு, மின்சார கட்டண உயர்வு, பத்திரப்பதிவு கட்டண உயர்வு என்று தொடர்ந்து பல்வேறு உயர்வுகள் நடைபெற்று வருகின்றன. தங்களது ஆட்சி பற்றி விளம்பரம் செய்வதில் கவனம் செலுத்துகிற அரசு, மக்களுக்கு உண்மையிலேயே பயன் சென்றடைகிறதா என்பதைப்பற்றி ஆய்வு செய்வதில்லை.
2022, 2023, 2024 என்று ஆண்டுக்கு ஒரு முறை நிதிநிலை அறிக்கை வெளியிடுவதைப் போல மின் கட்டண உயர்வை வெளியிட்டு வருகிறது இந்த அரசு. நாடாளுமன்றத் தேர்தலில் 39 இடங்களைப் பெற்ற இறுமாப்பில், விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் முடிந்தவுடன் தமிழக மக்களின் நெற்றியில் பட்டை நாமத்தைப் போட்டு மூன்றாவது முறையாக 5% மின் கட்டண உயர்வை பரிசளித்திருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
அதிமுக ஆட்சிக் காலத்தில் 200 யூனிட் மின்சாரம் ரூ.170க்கு வழங்கப்பட்டது தற்போது திமுக ஆட்சியில் ரூ.235க்கு வழங்கப்படுகிறது. அதேபோல், அதிமுக ஆட்சியில் 300யூனிட் மின்சாரம் ரூ.530க்கு வழங்கப்பட்டது தற்பொழுது திமுக ஆட்சியில் ரூ705க்கு வழங்கப்படுகிறது; 400 யூனிட் மின்சாரம் ரூ.830க்கு வழங்கப்பட்டது தற்போது ரூ.1175க்கு வழங்கப்படுகிறது; 500 யூனிட் மின்சாரம் ரூ.1130க்கு வழங்கப்பட்டது தற்போது ரூ.1805க்கு வழங்கப்படுகிறது.
மின் கட்டணம் உயர்வு மூலம் அரசுக்கு கூடுதலாக ஆண்டுக்கு 35,000 கோடி ரூபாய் கிடைக்கக்கூடிய இந்த சூழ்நிலையிலே, இன்றைக்கும் மின்வாரியத்தினுடைய நிலை கவலைக்குரியதாக இருக்கிறது. மின் உற்பத்தியை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்காமல் தனியாரிடமிருந்து கூடுதல் விலைக்கு ரூ.65,000 கோடி அளவுக்கு மின்சாரத்தை வெளிச்சந்தையில் வாங்குகிற காரணத்தால் தான் இந்த மின் கட்டண உயர்வு மக்கள் தலைமீது சுமையாக இறங்கியிருக்கிறது.
இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு நிறுவனங்கள் உள்ளன. இதில், தற்போதைய மின்சார விலை ஏற்றத்தால் 15 சதவீத சிறு, குறு நிறுவனங்கள் மூடக்கூடிய துர்ப்பாக்கிய நிலையில் உள்ளன. மீதமுள்ள 85 சதவீத சிறு, குறு நிறுவனங்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாக உள்ளது.
தமிழகத்தில் 2 கோடியே 21 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ளன. இதில் ஒரு கோடியே 90 லட்சம் பேர் மாதந்தோறும் அரிசி, பாமாயில், பருப்பு வாங்குகின்றனர். வெளிச்சந்தையில் ஒரு கிலோ துவரம்பருப்பு ரூ.185க்கும், பாமாயில் ஒரு லிட்டர் ரூ.90க்கும் விற்கப்படுகிறது. ஆனால், ரேஷன் கடைகளில் ஒரு கிலோ பருப்பு ரூ.30க்கும், பாமாயில் ஒரு லிட்டர் ரூ.25க்கும் விற்கப்படுகிறது. மேலும், 2024 ஏப்ரல் முதல் ரேஷன் கடைகளில் சமையல் எண்ணெய், பருப்பு போன்றவை வழங்கப்படவில்லை.
மின் கட்டண உயர்வைக் கண்டித்தும், ரேஷன் கடைகளில் பருப்பு, சமையல் எண்ணெய் வழங்காததைக் கண்டித்தும் தமிழக முழுவதும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நாளை (ஜூலை 23) மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது" என்று அந்த வீடியோவில் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: அதிகரிக்கும் வைரஸ் பாதிப்புகள்; மருத்துவ உபகரணங்களின் உள்நாட்டு உற்பத்தியை வலியுறுத்தும் நிபுணர்!