சேலம்: தமிழகத்தில் அரசு நியாய விலை கடை பணியாளர்கள் தங்களின் கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் இன்று(மே.10) சேலம் கோட்டை மைதானத்தில் நியாய விலை கடைகளில் வழங்கும் அனைத்து பொருட்களும் சரியான எடையில் பொட்டலமாக வழங்கிட வேண்டும், சரியான எடையில் பொருட்களை இறக்காமல் அபராதம் விதிக்கும் சுற்று அறிக்கையை திரும்ப பெற வேண்டும், நியாய விலைக் கடைகளில் அத்தியாவசிய பொருட்களை இறக்குவதற்கு கட்டாய இறக்கு கூலி வசூலிப்பதை தடுக்க வேண்டும், அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வரும் லாரிகளில் எடை தராசு மற்றும் நடமாட்ட பணியாளர் வரவேண்டும் என்பது உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தமிழக அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசைக் கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். மாநில துணைத்தலைவர் கணேசன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான நியாய விலை கடை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய கனேஷன் கூறுகையில், "தமிழக அரசு நியாய விலை கடைக்கு அனுப்புகின்ற அனைத்து பொருட்களுமே எடை குறைவாக தான் அனுப்புகிறது. குறைவான பொருட்களை அனுப்பி வைத்துவிட்டு ஆய்வு என்ற பெயரில் அதிகாரிகள் பல மடங்கு அபராதத்தை விதித்து வரும் சுற்று அறிக்கையை திரும்ப பெற வேண்டும்.
அனைத்து நியாய விலை கடைகளுக்கும் பொருட்களை பொட்டலமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநிலம் முழுவதும் 40 சதவீதத்திற்கும் மேல் பெண் பணியாளர்கள் நியாய விலைக் கடைகளில் பணியாற்றி வருகின்றனர்.
எந்த ஒரு ரேஷன் கடையிலும் கழிவறை வசதி இல்லை. மிக நீண்ட தூரத்தில் இருந்து ரேஷன் கடைகளுக்கு சென்று பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் எட்டு மணி நேரத்திற்கு பதிலாக 13 மணி நேரம் வரை ரேஷன் கடை பணியாளர்கள் ஒவ்வொரு நாளும் பணியாற்ற வற்புறுத்தப்படுகின்றனர். இந்த நிலைமைகளுக்கு உடனடியாக மாநில அரசு தீர்வு காண வேண்டும்" என்று கூறினார்.
இதையும் படிங்க: “ஐஏஎஸ் ஆவதே என் கனவு” ஒட்டன்சத்திரம் மாணவியின் சாதனைக்குக் குவியும் பாராட்டு! - TN 10TH RESULTS