ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி வாகனங்களை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் மூலம் ஆய்வு செய்யும் பணியினை மாவட்ட ஆட்சியர் வளர்மதி ராணிப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் தொடங்கி வைத்து வாகனங்களை ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது ஆட்சியர் வளர்மதி பள்ளி வாகனங்களில் அவசரக் கால வழி சரியான முறையில் இயங்குகிறதா? வாகனத்தில் தீயணைப்பு கருவிகள், வாகனத்தில் முதலுதவி பெட்டி, ஓட்டுநர் அமரும் இடம் பள்ளி குழந்தைகள் ஓட்டுநரை நெருங்காத வகையில் தனியாக பிரிக்கப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்தார்.
மேலும், பள்ளி வாகனத்தின் தரை தளம் பள்ளி குழந்தைகள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் உள்ளதா எனவும், வாகனத்தின் சக்கரங்கள் உள்ள பகுதிகளில் தரைதளம் உறுதித் தன்மையுடன் அமைக்கப்பட்டுள்ளதா என ஆய்வு மேற்கொண்டார்.
அதோடு, வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் சரியான முறையில் இயங்குகிறதா என்பதனையும் , வாகனத்தில் வேகக் கட்டுப்பாட்டுக் கருவி பொருத்தப்பட்டுள்ளதா என்பதையும், வாகனத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் போது பள்ளி குழந்தைகள் கை மற்றும் தலை வெளியே நீட்டாமல் தடுக்கும் வகையில் பக்கவாட்டில் கம்பிகள் பொருத்தப்பட்டுள்ளதையும் ஆய்வு செய்தார்.
முன்னதாக பேசிய மாவட்ட ஆட்சியர் வளர்மதி, ஆசிரியர்கள் குழந்தை வளர்ச்சிக்கு எவ்வளவு முக்கியமோ. அதே போல் பள்ளி வாகனங்களின் ஓட்டுநர்களின் கவனிப்பும், கண்காணிப்பும் முக்கியம். பள்ளி வாகன ஓட்டுநர்கள் வாகனங்களில் தினசரி மேற்கொள்ளும் சோதனைகளைத் தவறாமல் மேற்கொள்ளவேண்டும். பள்ளி மாணவ, மாணவிகளின் வருங்காலம் உங்கள் கையில் உள்ளது என்பதை உணர்ந்து ஓட்டுநர்கள் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.
தவறுகளை சுட்டிக்காட்டும் சமுதாய பொறுப்பும் உங்களுக்கு உள்ளது என ஓட்டுநர்கள் முன்னிலையில் பேசினார். தொடர்ந்து தீயணைப்புத் துறையினர் மூலம் பேருந்தில் தீ பிடித்துவிட்டால் அதனை எளிய முறையில் அணைப்பதற்கு உண்டான வழிமுறைகளைச் செய்து காட்டினர்.
மேலும், ராணிப்பேட்டை வட்டாரப் போக்குவரத்து அலுவலக கட்டுப்பாட்டிலுள்ள தாலுக்காவான (ராணிப்பேட்டை, ஆற்காடு, மற்றும் சோளிங்கர் ஆகிய பகுதியில் இயங்கும் 45 பள்ளிகளிலிருந்து 380 வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டு வருகிறது. மேலும் அரக்கோணம் தாலுக்காவில் உள்ள 27 தனியார் பள்ளிகளின் 198 வாகனங்கள் 16.05.2024 அன்று அங்கு செயல்படும் அலுவலக வளாகத்தில் ஆய்வு செய்யப்படவுள்ளது.
இதையும் படிங்க: தொழில் முனைவோர் ஆக ஒரு வாய்ப்பு! 100% உதவித்தொகையுடன் மதுரையில் பயிற்சி..மிஸ் பண்ணிடாதீங்க..!