ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தின் கடலோரப் பகுதியில் பெய்து வரும் கனமழையால் பல்வேறு மீனவர் கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மழைநீருடன் கடல் நீரும் வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் (நவம்பர் 19) இரவு தொடங்கி தற்போது வரை தொடர்ந்து கன மழை பெய்துவருகிறது. இதனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பாம்பன், மண்டபம், ராமேஸ்வரம், வேதாளை, மரைக்காயர் பட்டணம் உள்ளிட்ட கடலோர கிராமங்கள் மழை நீரால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
மண்டபம் பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை சுற்றிலும் மழைநீர் முழங்கால் அளவு தேங்கியுள்ளது. இதனால், நோயாளிகள் மருத்துவமனைக்குள் வர முடியாமலும், அவசர ஊர்தி உள்ளிட்ட வாகனங்கள் உள்ளே வர முடியாமலும் கடும் சிரமத்திற்கு ஆளாகியிருக்கின்றன.
பாம்பன், சின்னப்பாலம், முந்தன்முனை உள்ளிட்ட கடற்கரை ஓரமுள்ள மீனவர்கள் குடிசைகளுக்குள், மழை நீருடன் கடல் நீரும் புகுந்து வீடுகளுக்குள் இடுப்பளவு தண்ணீர் தேங்கி இருப்பதால், வீட்டில் வைத்திருந்த பொருட்கள் அனைத்தும் தண்ணீரில் மிதக்கின்றன. இதனால் மீனவ மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றனர்.
இதையும் படிங்க |
மேலும், அரியமான் கடற்கரை பகுதியில் பெய்து வரும் கனமழையால் மழைநீர் கடல் நீருடன் கலந்து கடற்கரை மணல் முழுவதும் தண்ணீர் சூழ்ந்து நிலப்பரப்பும் கடலும் தெரியாத அளவு காணப்படுகிறது.
இதனால் அப்பகுதிக்கு மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் கடலோர பகுதிகளுக்கோ, கடலுக்குள்ளோ செல்ல வேண்டாம் என கடலோர காவல்துறை எச்சரித்துள்ளது.
பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்ட தகவல்
Ramewaram massive 411 mm rainfall till 4.00 pm thats massive rains in just 10 hrs. Thangachimadam too 322 mm. Some historic rains in Rameswaram belt. pic.twitter.com/Tq4TT6QkWp
— Tamil Nadu Weatherman (@praddy06) November 20, 2024
ராமநாதபுரம் மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் மழைப் பொழிவின் அளவை வெளியிட்டுள்ளது. அதன்படி, காலை 6 மணிமுதல், மாலை 4 மணிவரை ராமேஸ்வரத்தில் 411 மில்லிமீட்டர் அதிகபட்ச மழைப் பதிவாகியுள்ளது. இதனையடுத்து தங்கச்சிமடம் பகுதியில் 322 மிமீ மழையும், மண்டபம் பகுதியில் 261 மிமீ, பாம்பன் பகுதியில் 237 மிமீ மழையும் பதிவாகியுள்ளது.
முறையே, ராமநாதபுரத்தில் 75 மிமீ, கடலாடி 71.2 மிமீ, வலிநோகம் 65.6 மிமீ, முதுகுளத்தூர் 48.2 மிமீ, கமுதி 45.8 மிமீ, பள்ளமூர்குளம் 45.2 மிமீ, பரமகுடி 25.6 மிமீ, திருவாடனை 11.8 மிமீ, ஆர்.எஸ்.மங்கலம் 10.4 மிமீ, தீர்தண்டதனம் 7.2 மிமீ அளவு மழை பதிவாகியுள்ளதாக பேரிடர் மேலாண்மை ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்