சேலம்: பிரபல தனியார் வணிக நிறுவனத்தின் புதிய கிளை, சேலம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் இன்று திறக்கப்பட்டது. திறப்பு விழாவிற்கு மன்னார்குடி ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ செந்தலங்கர சம்பத் குமார ராமானுஜ ஜீயர் வருகை தந்து ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏற்றி கைடயை துவக்கி வைத்தார். பின்னர் கடையில் உள்ள துணிகளை பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழகத்தில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இந்து திருக்கோயில்கள் உள்ளன. தற்போது உள்ள திமுக அரசிற்கு தெம்பும், திராணியும் இருந்தால் இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இந்து திருக்கோயில்கள் இருப்பதைப் போல தேவாலயங்கள் மற்றும் மசூதிகளைக் கொண்டு வர வேண்டும். ஒவ்வொரு முறையும் எல்லோரும் சமம்... சாதி, மதம் ஒன்று... எனக் கூறிவரும் இந்த அரசு இந்துக்களுக்கு எதிராகவே செயல்பட்டு வருகிறது.
இந்து திருக்கோயில்களை மட்டும் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அவமானம். தேவாலயங்கள் மற்றும் மசூதிகளை கொண்டுவர முடியவில்லை என்றால் இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இருந்து, இந்து திருக்கோயில்கள் நீக்கப்பட வேண்டும்.
தமிழக அரசு திருக்கோயில்களில் தற்போது கும்பாபிஷேகம் நடத்தி வருகிறது. ஆனால் அரசு பணத்தில் செய்யாமல் பக்தர்கள் காணிக்கையாக கொண்டுவரும் பணத்தை வைத்து கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. அதேநேரத்தில் இந்து அறநிலையத் துறையில் நிறைய ஊழல்கள் நடந்துள்ளது.
இந்தியாவில் மூன்றாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்று உள்ளார். இது வரவேற்கத்தக்கது. இந்து தர்மத்தை நிலை நாட்டக்கூடிய மோடி அவர்கள் தொடர்ந்து நீடிக்க வேண்டும். அவர் இன்னும் இரண்டு முறை கூட பிரதமராக பதவி ஏற்பார். இந்து தர்மத்திற்காக அயராது உழைக்கும் நரேந்திர மோடி மூன்றாவது முறை மட்டுமல்ல இந்து தர்மம் காக்கும் வரை பிரதமராக இருப்பார்.
திமுக அரசு இந்துக்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்து, இந்துக்களுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு வருகின்றது. தேர்தலின்போது இந்துக்களை இழிவாக பேசக்கூடிய தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை கோயில் கோயிலாக சுற்றி வந்தனர். காரணம் தேர்தலின்போது வாக்கு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்பட்டனர்" என்று ஜீயர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சென்சார் முறையில் சாமிக்கு அபிஷேகம்.. இந்துக்களின் வழிபாட்டிற்காக இஸ்லாமியரின் அசத்தல் கண்டுபிடிப்பு! - Invention Of Censor Devotional Kit