ராமநாதபுரம்: குவைத்தில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் இந்தியாவைச் சேர்ந்த ஏராளமானோர் தீயில் கருகி உயிரிழந்ததாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் அந்த தீ விபத்தில் சிக்கி உயிரிழந்ததுள்ளதாக வந்துள்ள தகவல் ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் தென்னவனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பணன் ராமு. இவர் பல ஆண்டுகளாக குவைத்தில் தங்கி அங்குள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில் குவைத்தில் ஏற்பட்ட தீ விபத்து கட்டடத்தில் இவரும் தங்கி இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், அந்த தீ விபத்தின் போது ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாக கருப்பணன் ராமு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் குவைத்தில் இருந்து தகவல்கள் வந்துள்ளன.
அதனைத் தொடர்ந்து, கருப்பணன் ராமு உயிரிழந்ததாக அவருடன் பணியாற்றக்கூடிய உறவினர்கள் தகவல் தெரிவித்ததன் பெயரில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவல்களால் ராமநாதபுரத்தில் உள்ள அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், அவரது மனைவி குருவம்மாள், மகன் சரவணக்குமார் உள்ளிட்டோர் கதறி அழுத காட்சி கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதுதொடர்பாக, இந்திய வெளியுறவுத்துறை உடனடியாக விசாரணை நடத்தி அவர் இறந்திருந்தால், உடலை தமிழ்நாடு கொண்டு வரவும், அவரது குடும்பத்திற்கு உரிய இழப்பீடு பெற்றுத் தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கருப்பணன் ராமு கடந்த 26 ஆண்டுகளாக குவைத் நாட்டில் பணிபுரிந்து வந்ததாகவும், விசாவை முடித்துவிட்டு இன்னும் ஒரு வாரத்தில் சொந்த ஊரான ராமநாதபுரம் வர இருந்த நிலையில், இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தது அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடையே மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சேலம் அருகே கோர விபத்து: குழந்தைகள் உட்பட 5 பேர் பலி!