சென்னை: நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தங்கள் பிரசாரங்களை, தேர்தல் வாக்குறுதிகளுடன் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், "இந்தியா கூட்டணி அரசு ஆட்சியில் அமைந்தவுடன், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். எனவே, இந்தியா கூட்டணிக்கு உங்களது ஆதரவைத் தாரீர்" என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன், தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவது உள்ளிட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார்.
மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களையும் ஏமாற்றுவதற்கு அனுமதிக்கக்கூடாது. 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நலன் சார்ந்து திமுக அளித்த வாக்குறுதிகளில் மிகவும் முக்கியமானவை,
- தற்காலிக ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பணி நிலைப்பு செய்யப்படுவார்கள் (வாக்குறுதி எண்:153)
- 70 வயதைக் கடந்த ஓய்வூதியர்களுக்கு 10 சதவீதம் ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்படும் (வாக்குறுதி எண்:308)
- அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்பட்டு, பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் (வாக்குறுதி எண்:309)
- சமவேலைக்கு சம ஊதியம் என்ற தத்துவத்தின்படி, ஆசிரியர்களுக்கு இடையிலான ஊதிய முரண்பாடுகள் களையப்படும் (வாக்குறுதி எண்: 311)
- அங்கன்வாடி பணியாளர்களும், சத்துணவு பணியாளர்களும் அரசு ஊழியர்களாக்கப்படுவார்கள் ( வாக்குறுதி எண்: 313)
இந்த 5 வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட திமுக அரசு நிறைவேற்றவில்லை. இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி சம்பந்தப்பட்ட அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் ஆண்டுக்கு ஒருமுறை வீதம் இதுவரை மூன்று முறை சென்னையில் பல வடிவங்களில் போராட்டம் நடத்தியுள்ளனர். சில வாரங்களில் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தும் கூட இதுவரை ஒரு கோரிக்கை கூட நிறைவேற்றப்படவில்லை.
தமிழ்நாட்டில் மட்டுமே நிதி நெருக்கடி நிலவவில்லை. அனைத்து மாநிலங்களும் கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றன. இருப்பினும் கர்நாடகம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், ஜார்கண்ட் உள்ளிட்ட 7 மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அந்த மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் சாத்தியமாகும் போது, தமிழகத்தில் மட்டும் அதற்கு சாத்தியம் இல்லை என்று கூற முடியாது.
வரும் 19ஆம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியை அரசு ஊழியர்களும், பொதுமக்களும் வீழ்த்த வேண்டும். அவ்வாறு வீழ்த்தினால், அடுத்த மாதமே பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட அனைத்துக் கோரிக்கைகளையும் திமுக அரசு நிறைவேற்றும்" என அறிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி: இதனிடையே, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்புக்கு விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் தமிழ்நாட்டின் நிதிநிலை சீராகும் என்ற ஸ்டாலினின் அறிவிப்பு 'அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா' என்ற சொல்லாடலை நினைவுபடுத்தும் வெறும் என்பதை அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் நன்கு அறிவார்கள்.
அதிமுக அரசு இந்தியா அளவில், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக புதிய சம்பள உயர்வை அமல்படுத்திய முதல் மாநிலம் என்பதோடு, ஒவ்வொரு முறையும் மத்திய அரசு அறிவிக்கும் அகவிலைப்படி உயர்வை முன்தேதியிட்டு, பணப்பயனுடன் வழங்கியது என்பதை இங்கு நினைவுகூற கடமைப்பட்டுள்ளேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ரூ.4 கோடி பறிமுதல்; நயினார் நாகேந்திரனுக்குச் சொந்தமான அனைத்து இடங்களிலும் சோதனை நடத்த திமுக வலியுறுத்தல்!