சென்னை: 1991ஆம் ஆண்டு மே 21ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 32 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட சாந்தன் சென்னையில் இன்று (பிப்.27) காலமானார்.
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் இருந்த சாந்தன், கல்லீரல் பாதிப்பு மற்றும் கால் வீக்கம் உள்ளிட்ட பாதிப்புகளால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக அவர், திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், அம்மாவட்ட ஆட்சியரின் அனுமதியுடன், மேல் சிகிச்சைக்காக திருச்சியிலிருந்து சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவரது உடல்நிலை மிகவும் பின்னடைவு ஏற்பட்டது. இதனிடையே, சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார்.
சாந்தன் உயிரிழந்தது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த ராஜீவ் காந்தி மருத்துவமனை முதல்வர் தேரணிராஜன், 'திருச்சி மாவட்ட ஆட்சியர் பரிந்துரையின் பெயரில் கல்லீரல் பிரச்னைக்காக கடந்த ஜனவரி 27ஆம் தேதி உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்தனர். கல்லீரல் செயலிழப்பு எதனால் என்பதை ஆராய தசையை எடுத்து பரிசோதனை செய்ய மறுத்துவிட்டார்.
நேற்று இரவு ஒரு பின்னடைவில் இருந்து மீண்டு வந்ததார். இன்று அதிகாலை 4.15 மணியளில் இதய அடைப்பு ஏற்பட்டது. சி.பி.ஆர் (CPR) செய்யப்பட்ட நிலையில், காலை 7.50 மணியளவில் சாந்தன் உயிரிழந்தார். உடல் பிரேத பரிசோதனை செய்யப்படவுள்ளது' எனத் தெரிவித்துள்ளார்.
இவரைத்தொடர்ந்து பேசிய வழக்கறிஞர் புகழேந்தி, 'சாந்தனை இலங்கைக்கு அனுப்ப எந்த ஒரு நடவடிக்கையும் ஒன்றிய அரசு எடுக்கவில்லை. சாந்தனுக்கு காலம் தாமதமாக சிகிச்சை அளிக்கப்பட்ட காரணத்தினால், தற்போது உயிர் இழந்துள்ளதாக' அவரது வழக்கறிஞர் புகழேந்தி கண்ணீர் மல்க வேதனையாக தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், 'மருத்துவமனை முதல்வர் சொன்னது சரிதான் கல்லீரல் தசை எடுத்து பரிசோதனை செய்ய சாந்தன் ஏற்றுக்கொள்ளவில்லை எனக்கு தெரியும். அவர் கடைசியாக அவரது தாயாரைப் பார்க்க எண்ணினார். சட்டரீதியாக பணிகளை முடித்து இலங்கை யாழ்ப்பாணத்திலுள்ள சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது. மேலும், உடல்நிலை குறைவால் காலமான சாந்தன் உடலை எடுத்துச் செல்ல தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்' என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான சாந்தன் காலமானார்