சென்னை: வடபழனியில் உள்ள காவேரி மருத்துவமனையில் புதிதாக 9 உடலுறுப்பு அறுவை சிகிச்சை மையங்களை நடிகர் ரஜினிகாந்த் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து மேடையில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் , "25 வருடமாக நான் எந்த ஒரு நிறுவனத்தின் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளவில்லை. அப்படி நான் கலந்து கொண்டால், ரஜினி அதில் பாட்னராக இருக்கிறார் என்று கூறுவார்கள்.
அதற்காகவே நான் எந்த நிகழ்ச்சிகள், திறப்பு விழாக்களில் கலந்து கொள்வதில்லை. எனது உடல் இசபெல்லா மருத்துவமனை, விஜயா மருத்துவமனை, அப்போலோ மருத்துவமனை, ராமச்சந்திரா மருத்துவமனை என பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்துள்ளது. அதனால் டாக்டர்கள், செவிலியர்கள் மீது எனக்கு பெரிய மதிப்புண்டு.
மருத்துவத்தால்தான் நான் இன்னும் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். நான் இங்கு வந்து பார்க்கும் போது, பழைய நினைவுகள் தான் ஞாபகத்திற்கு வருகிறது. ஏவிஎம் ஸ்டியோவை பார்க்கும்போது, இந்த இடம் மேடு பள்ளமாக இருக்கும். வெளியில் சென்று படப்பிடிப்பு முடித்து விட்டு வந்த பின்னர், இறுதியாக இங்கு படப்பிடிப்பு நடத்துவோம். ஏவிஎம் புரோடெக்ஷன் 'சம்சாரம் அது மின்சாரம்' படம் எடுத்தனர். அதற்காக தனியாக ஒரு வீட்டை கட்டினர். அந்தப் படம் செலவு செய்ததை விட, அதிகமாக வருமானம் பெற்றுத் தந்தது. ராசியான இடத்தில் ஒரு மருத்துவமனை கட்டி இருக்கிறார்கள், மிகப்பெரிய வெற்றி அடையும்.
மருத்துவமனைகளுக்கு நாம் நோயாளிகளை பார்க்கவோ அல்லது நோயாளியாவோ செல்கிறோம். எனக்கு உடல்நிலை சரியில்லாத போது, காவேரி மருத்துவமனையில் இருந்து மருத்துவர்கள் என்னை வந்து பார்த்து பரிசோதனை செய்து, மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸை எதிர்பார்க்காமல் அழைத்துச் சென்றனர்.
பின்னர் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்தனர். மருத்துவமனையில் நான் இருந்து போது, ஊழியர்கள் நோயாளிகளை நன்றாக கவனித்தனர். ஒரு மனிதன் வாழ்க்கையில் முன்னேற ஒழுக்கம் முக்கியம். ஒரு மனிதனுக்கு ஒழுக்கும் இல்லை என்றால், வாழ்க்கையில் முன்னேறவே முடியாது.
ஒழுக்கம் , நேர்மை, கடின உழைப்பு, அர்ப்பணிப்பு ஆகிய நான்கும் இருந்தால் யாராக இருந்தாலும் கவனிக்கப்பட்டு, வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய முடியும். முதலில் காவேரி மருத்துவமனை எங்கு இருக்கின்றது என்று கேட்டால், கமல்ஹாசன் வீட்டு அருகே இருக்கிறது என்று கூறுவர்.
ஆனால், தற்போது கமல் வீடு எங்கு இருக்கின்றது என்று கேட்டால், காவேரி மருத்துவமனை அருகே உள்ளது என்று கூறுகிறார்கள் அந்த அளவிற்கு காவேரி மருத்துவமனை வளர்ந்து இருக்கிறது. நான் இவ்வாறு கூறியதற்கு கமல் பற்றி ரஜினி தவறாக பேசியதாக செய்தி போடாதீர்கள், நான் இயல்பாக கூறினேன்.
ஏனென்றால், இப்போதெல்லாம் மீடியாவை பார்த்தாலே நடுக்கமாக உள்ளது. இப்போது தேர்தல் சமயமாகவும் இருப்பதால், மூச்சு விடவே பயமாக இருக்கிறது. தமிழ்நாடு, மருத்துவத்தில் வளர்வது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. தமிழ்நாட்டில் வீட்டுமனைகள் விற்பனை செய்வதற்கு அளிக்கப்படும் விளம்பரங்களின் அருகிலேயே பஸ் ஸ்டாண்ட், கடை, பள்ளிகள், கல்லூரிகள் இருக்கிறது என கூறுகின்றனர்.
ஆனால், பக்கத்தில் நல்ல மருத்துவமனை இருக்கிறது என யாரும் கூறுவதே கிடையாது. இவை எல்லாவற்றையும் விட மருத்துவமனைதான் மிகவும் முக்கியமானது. தற்போது யாருக்கு எந்த வயதில் என்ன நோய் வரும் என தெரியாது. ஏனென்றால் காற்று, தண்ணீர், பூமி உள்ளிட்ட எல்லாவற்றிலும் கலப்படம் ஆகிவிட்டது.
பச்சை குழந்தைகளுக்கான மருந்திலும் கலப்படம் செய்கின்றனர். அவர்களை கையில் விளங்கு போட்டு, தெருவில் இழுத்துக் கொண்டு சென்று, சாகும் வரையில் சிறையில் அடைக்க வேண்டும். தற்போது மருத்துவச் செலவு அதிகமாகி விட்டதால், காவேரி மருத்துவமனையில் ஏழைகளுக்கும் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அது உங்களுக்கு புண்ணியத்தை தரும்” என பேசினார்.
இதையும் படிங்க: இளையராஜா பயோபிக் குறித்துத் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட முக்கிய அப்டேட்!