சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று (டிசம்பர் 12) தனது 74-ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இந்த நிலையில், அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாகவும், அவர் ஆரோக்கியமாக இருக்க வேண்டியும் அவரது உருவத்தை ருத்ராட்சத்தின் மீது வரைந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டையைச் சேர்ந்த ஓவியர் செல்வம் அசத்தியுள்ளார். இது குறித்த புகப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். அவரது 74-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிப்பில் வெளியான 'தளபதி' படம் தமிழகம் முழுவதும் இன்று ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது. மேலும், மதுரை திருமங்கலத்தில் ரஜினி நடித்த மாப்பிள்ளை திரைப்பட கதாபாத்திரத்திர வடிவில் உருவச்சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
நடிகர் ரஜினியும் - ருத்ராட்சமும்
நடிகர் ரஜினிகாந்த் அடிக்கடி ருத்ராட்சம் அணிவது வழக்கம். அவருக்கு ருத்ராட்சத்தின் மீது உறுதியான நம்பிக்கை உள்ளதாக அவர் பல்வேறு இடங்களில் தெரிவித்துள்ளார். ருத்ராட்சம் தனது வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாக உணர்பவர்.
இதையும் படிங்க: மதுரையில் ரஜினிக்கு கோயில்.. 300 கிலோவில் சிலையை பிரதிஷ்டை செய்த தீவிர ரசிகர்..!
அவர், நடித்த ‘அருணாச்சலம்’ படத்தில், அவரது கழுத்தில் அணிந்திருக்கும் ருத்ராட்சையை குரங்கு பிடுங்கிச் செல்லும். அவற்றை ரத்திச் சென்று ருத்ராட்சையை எடுக்கும்போது எதிரிகளின் சதியைத் தெரிந்து கொள்வார். அதன் பின்னரே ரூ.30 கோடியை 30 நாட்களில் அசால்டாக செலவு செய்து நான்கு எதிரியை கடைசி ஐந்து நிமிஷத்தில் வென்றிருப்பார்.
இந்நிலையில், அவரது பிறந்தநாளில் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக, ருத்ராட்சத்தின் மீது அவரது உருவத்தை எனாமல் பெயிண்ட் கொண்டு நான்கு நிமிடங்களில் ஓவியர் செல்வம் வரைந்து அசத்தியுள்ளார். இந்த ஓவியத்தை பார்த்த பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் ஓவியர் செல்வத்தை பாராட்டி வருகின்றனர். இது குறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.