சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்நிலையில் தமிழர்களை சாராயம் குடிப்பவர்களாக மாற்றுவதே குலதெய்வங்கள் தான். சாராயச் சாவுகளுக்கு அடிப்படைக் காரணமான குலதெய்வ நாட்டார் தெய்வ கிராமக் கோவில் திருவிழாக்களைத் தடை செய்ய வேண்டும் என்று ஆளுநர் ஆர். என்.ரவி கூறியதாக ஒரு செய்தி பரவியது.
தற்போது இந்த செய்தி உண்மையில்லை முற்றிலும் போலியானது என ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை இன்று வெளியிட்டுள்ள செய்தி்க்குறிப்பில், "குலதெய்வ வழிபாடு தொடர்பாக ஊடகங்களில் பரவி வரும் போலிச் செய்தியை ஆளுநர் மாளிகை முற்றிலுமாக மறுப்பதோடு, தவறான நோக்கத்துடன் பரப்பப்படும் போலி தகவலால் பொதுமக்களை தவறாக வழிநடத்தும் இந்த செயலை வன்மையாகக் கண்டிக்கிறது.
இதுபோன்ற தவறான தகவல்களைப் பரப்பும் செயல், மாநிலத்தின் மிக உயரிய பதவி வகிப்பவரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், பொதுமக்களை தவறாக வழி நடத்துகிறது மற்றும் அமைதி இன்மையை உருவாக்குகிறது.
இந்த போலியான தகவலைப் பரப்பியவர்கள் பற்றி முழுமையாக விசாரணை நடத்தி உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு ஆளுநர் மாளிகை காவல்துறையில் முறையான புகார் ஒன்றை அளித்துள்ளது. இந்தப் பிரச்சனையை உடனடியாக எங்களின் கவனத்திற்குக் கொண்டு வந்ததற்காகப் பொதுமக்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சென்னை மாநகராட்சி முன்னாள் சுகாதார அலுவலர் காலமானார் - OFFICIER DOCTOR KUGNANTHAM DIED