சென்னை: தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் துவங்கியது. அப்போது ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசுத் தரப்பில் வழங்கப்பட்ட உரையை வாசிக்காமல் புறக்கணித்ததாகக் கூறப்பட்டது. தமிழில் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த ஆளுநர் ரவி, 2 நிமிடங்களில் உரையை முடித்துக் கொண்டு அமர்ந்து விட்டார்.
பின்னர் சபாநாயகர் அப்பாவு ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை வாசித்தார். ஏற்கனவே கடந்த ஆண்டும் முதல் கூட்டத்தொடரில் தமிழக அரசின் உரையை ஆளுநர் மாற்றி வாசித்தது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்த நிலையில் இந்த ஆண்டு முழு உரையையுமே புறக்கணித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் ஆளுநர் மாளிகை தரப்பில் அதற்கு விளக்கம் அளித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது, அதில், "அரசிடம் இருந்து ஆளுநர் உரைக்கான வரைவு உரை கடந்த 9ஆம் தேதி கிடைத்தது. அதில் ஏராளமான பத்திகள் தவறானதாகவும் உண்மைக்குப் புறம்பானதாகவும் இருந்தது.
அதனையடுத்து, ஆளுநர் உரைக்கு முன்னும் பின்னும் தேசிய கீதம் இசைக்க வேண்டும் எனக் கடந்த காலங்களிலேயே முதலமைச்சர், சபாநாயகருக்கு ஆளுநர் கடிதம் எழுதியிருந்தார். ஆளுநரின் உரையானது அரசின் சாதனைகள், கொள்கைகளைப் பிரதிபலிக்க வேண்டுமே தவிர தவறாகவோ அரசியல் கருத்தாகவோ இருக்கக் கூடாது, ஆகிய ஆலோசனைகளுடன் ஆளுநர் உரையைத் திருப்பி அனுப்பி இருந்தார்.
ஆனால் ஆளுநரின் பரிந்துரையை அரசு புறக்கணித்துவிட்டது. இன்று காலை அவையில் உரையாற்றிய ஆளுநர் சபாநாயகர், முதலமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துவிட்டு, திருக்குறளையும் வாசித்தார். அதன்பிறகு அதில் இருந்த தவறான கூற்றுகளையும், உண்மைக்கு புறம்பானவற்றையும் அரசியலமைப்புச் சட்டத்தின்படி அதற்கு மேல் ஆளுநரால் உரையை வாசிக்க முடியவில்லை. அதனால் அவைக்கு மரியாதை அளித்து, வாழ்த்து தெரிவித்து உரையை முடித்தார்.
அதன் பின்னர் உரையின் தமிழாக்கத்தைச் சபாநாயகர் வாசிக்கும் வரை ஆளுநர் அவையில் அமர்ந்திருந்தார். அதன்பின்னர் தேசிய கீதத்திற்காக ஆளுநர் எழுந்த போது சபாநாயகர் ஆளுநருக்கு எதிராக அவதூறாக, அவர் நாதுராம் கோட்சே உள்ளிட்டவர்களை பின்தொடர்பவர் எனக் கூறினார். சபாநாயகரின் நடவடிக்கையினால் அவர் பொறுப்பின் மாண்பையும், கவுரவத்தையும் குறைத்தார்.
சபாநாயகர் ஆளுநரைக் கடுமையாக விமர்சித்து பேசியபோதும் ஆளுநர் அவரின் பதவி மற்றும் சபையின் கண்ணியத்தைக் கருத்தில் கொண்டு அவையில் இருந்து வெளியேறினார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.