கம்பம்: தேனி மாவட்டம் கம்பம் பகுதியை சேர்ந்த பொன்னார் (35) என்ற இளைஞருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் (38) ஆகிய இருவருக்கும் இடையே மதுபான கடையில் மது குடிக்கும்போது தகராறு ஏற்பட்டதால் இருவருக்கும் இடையே முன்விரோதம் உண்டானது.
இந்த நிலையில், கடந்த 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் 15ம் தேதி அன்று சாலையோர இளநீர் கடை அருகே பொன்னார் நின்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக வந்த மகேந்திரனை கண்டதும் இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டு சண்டை முற்றியுள்ளது.
இதில், பொன்னார் இளநீர் கடையில் இருந்த அரிவாளை எடுத்து மகேந்திரனை சரமாரியாக வெட்டியதில் சம்பவ இடத்திலேயே மகேந்திரன் பலியானார். இந்த கொலைச் சம்பவம் குறித்து கம்பம் வடக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை அறிக்கை தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.
இதையும் படிங்க: மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து வாலிபர் பலி..சென்னையில் மீண்டும் சோகம்
இதனைத் தொடர்ந்து, இன்று இந்த வழக்கு விசாரணை முடிவுற்று சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில், பொன்னார் மகேந்திரனை வெட்டி படுகொலை செய்தது உறுதி செய்யப்பட்டு குற்றவாளி என தீர்மானிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து குற்றவாளி பொன்னாருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி அறிவொளி தீர்ப்பு வழங்கினார். இதனை அடுத்து குற்றவாளி பொன்னாரை மதுரை மத்திய சிறையில் அடைக்க காவல்துறையினர் அழைத்துச் சென்றனர்.