சென்னை: வங்கக்கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சி, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாக வாய்ப்பு இருப்பதால் சென்னை மற்றும் செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி நேற்று நள்ளிரவு முதலே கன மழையானது சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்து வருகிறது. இதன் காரணமாக பெரும்பாலான பகுதிகளில் சாலை முழுவதும் மழை நீரால் சூழ்ந்து காணப்படக்கூடிய நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக பெரம்பூர், ராயபுரம், தியாகராய நகர், பெரியமேடு, அண்ணாசாலை, புளியந்தோப்பு, பட்டாளம், மேற்கு மாம்பலம், புரசைவாக்கம், வடபழனி, அரும்பாக்கம், தரமணி, வியாசர்பாடி, அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளது. நாளை சென்னைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் மழையின் தாக்கம் இன்னும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: மாநாடு பணிகளை முடக்கிய தொடர் மழை.. நீரும், சேறுமாக காட்சியளிக்கும் வி.சாலை.. நடைபெறுமா தவெக மாநாடு..?
இந்தநிலையில் கனமழையால் பொதுமக்களுக்கு ஏற்படக்கூடிய சிரமம் என்ன? என்பது குறித்துக் கொட்டும் மழையில் நமது செய்தியாளரிடம் பொதுமக்கள் தெரிவித்த கருத்துகளைப் பார்ப்போம்.
பள்ளங்களை சீரமைக்க வேண்டும்: இது குறித்து சசி குமார் என்பவர் கூறுகையில், "வானிலை ஆய்வு மையம் கூறிய படியே கன மழை பெய்து வருகிறது. நேற்று நள்ளிரவு முதலே கன மழை பெய்து வருகிறது. பள்ளி கல்லூரிக்கு விடுமுறை அளித்தாலும், வேலைக்கு செல்பவர்கள் மிகவும் சிரமத்துடன் செல்ல வேண்டியுள்ளதாக உள்ளது.
சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் ஆங்காங்கே உள்ளது. இதனால் சாலை எது பள்ளம் எது என்று தெரியாத நிலை வாகன ஓட்டிகளுக்கு ஏற்படுகிறது. நாளை சென்னைக்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. அதனால் மழை இன்னும் அதிகமாக பெய்யும் என நினைக்கிறேன். மழைவிட்ட உடன் மழை நீர் வடிகால்வாய் பணி விரைவுபடுத்தினால் நன்றாக இருக்கும். இன்றைய தினம் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், நாளை ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், மழையின் தாக்கம் இன்னும் அதிகமாக இருக்கும் என நினைக்கிறேன்" என தெரிவித்தார்.
மழை நீரை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்: இதையடுத்து பேசிய ஜெகதீஸ்,"நல்ல கன மழை பெய்து வருவதால் பகல் நேரமே மாலை நேரம் போல் தோன்றுகிறது. மழை நீர் தேங்கிய உடனே அப்புறப்படுத்தினால் பல்வேறு நோய்களிலிருந்து குழந்தைகளைக் காப்பாற்றலாம் என கூறினார். மேலும் பணிக்கு செல்பவர்கள் பேருந்துக்காக நீண்ட நேரம் காத்திருந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்" என தெரிவித்தார்.