தமிழ்நாடு: தமிழகத்தில் எந்த வருடமும் இல்லாத அளவு இந்தாண்டு வெயில் கொளுத்தி, வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து மக்களை வாட்டி வதைத்து வந்தது. மக்களை வீட்டில் இருந்து வெளியே வரவிடாமல் வெப்ப அலை முடக்கி வைத்தது. அதிலும் குறிப்பாக, சேலம், ஈரோடு, கரூர் போன்ற மாவட்டங்களில் 105 டிகிரி வரை வெயில் பதிவாகி இருந்தது.
இந்நிலையில், தமிழக மக்கள் மழைக்காக ஆவலாக காத்திருந்த நிலையில், 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்திருந்தது. அதேபோல, இன்று அதிகாலை முதல் பல்வேறு மாவட்டங்களில் லேசான முதல் கனமழை பெய்தது. சுட்டெரிக்கும் வெயிலால் அவதிப்பட்டு வந்த தமிழக மக்கள் மழையால் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
திருவண்ணாமலை: இன்று அதிகாலையில் பலத்த காற்றுடன் கீழ்பென்னாத்தூர், மேக்களூர், வேடந்தவாடி, மங்கலம், கருமாரப்பட்டி, சோமாசிப்பாடி சுற்றுவட்டார பகுதியில் சுமார் ஒரு மணி நேரமாக கனமழை கொட்டி தீர்த்தது. திடீர் மழையால் வெப்பம் தணிந்து குளுமையான சூழல் நிலவி வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அரியலூர்: கடந்த பல நாட்களாக, அரியலூரில் சதம் அடித்த வெயிலால் வெப்ப அலை வீசி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், இன்று காலை நேரத்தில் பருவ நிலையில் ஏற்பட்ட மாற்றத்தால், மாவட்டத்தின் பல்வேறு மாவட்டங்களில் கருமேகங்கள் சூழ்ந்து சில்லென்ற சூழல் நிலவியது. பின்னர், பெய்த கோடை மழையால் பூமியும் மக்களும் குளிர்ந்துள்ளனர்.
மயிலாடுதுறை: இன்று அதிகாலை முதல் மயிலாடுதுறை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் சிறிது நேரம் மழை கொட்டி தீர்த்தது. மாவட்டத்தில் மின்வெட்டு இருப்பதால் குறுவை சாகுபடி பணி பாதிக்கப்பட்டு வந்த நிலையில் இந்த மழை தொடர்ந்து பெய்தால் விவசாயப் பணி தொடங்கலாம் என்றும் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.
சிதம்பரம்; ஒருவர் பலி: கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று காலை 7 மணியளவில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. குறிப்பாக, சூறைக்காற்றுடன் பெய்த கனமழையில், சிதம்பரத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி உதயகுமார் (49), வேலைக்கு இரு சக்கர வாகனத்தில் சென்ற போது தென்னை மரம் சாய்ந்து விழுந்ததில் உயிரிழந்துள்ளார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது
வேலூர்: கடந்த மே 1ம் தேதி 111 டிகிரியை தொட்டு வெயில் தாக்கத்தில் முதல் இடத்தை பிடித்த வேலூரில் இன்று அதிகாலை இடியுடன் கூடிய பலத்த காற்றுடன் மிதமாக மழை பெய்தது. வெயிலின் தாக்கம் மக்களை வாட்டி வந்த நிலையில், வெப்ப உஷ்ணம் குறைந்து தற்போது குளிர்ச்சியான சூழல் நிலவி வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.