சென்னை: தென்மேற்கு பருவமழை முழுமையாக விலகி வடகிழக்கு பருவமழை நேற்று தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது அதையடுத்து சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்தது. இந்நிலையில் இன்று (அக்.16) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
குளம் போல் காட்சியளிக்கும் சென்னை: சென்னையின் ஒரு சில இடங்களில் மழை விட்டு விட்டுப் பெய்தாலும் சென்னை புறநகர் பகுதிகளான எண்ணூர், மாதவரம் பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாகச் சென்னை புறநகர் பகுதிகளான திருவெற்றியூர், எண்ணூர், மாதவரம் , கொளத்தூர் உள்ளிட்ட தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது. மேலும் சாலைகள் மட்டும் அல்லாமல் வீடுகளில் உள்ளேயும் மழை நீர் சூழ்ந்துள்ளது.
இதையும் படிங்க: குறைந்தது கனமழை; வழக்கம்போல நம்பிக்கையுடன் கண்விழித்த சென்னை!
வீட்டை காலி செய்யும் மக்கள்: அதில் குறிப்பாகச் சென்னை அடுத்த மாதவரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட விளங்காடுபாக்கம் ஊராட்சி கோமதி அம்மன் நகர் பகுதி முழுவதும் மழை நீரால் சூழப்பட்டு குளம் போல் காட்சியளிக்கிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். சரியான உணவு, இருப்பிடம், கழிவறை என அடிப்படை வசதி இன்றி சிரமம் அடைவதாகக் கூறி வீட்டில் இருக்கும் பொருட்களை வாகனத்தில் ஏற்றி வீட்டை காலி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்