தூத்துக்குடி: நெல்லையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையம் வந்தார். அப்போது விமான நிலையத்தில் வைத்து, செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது பேசிய அவர், "தென் மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத கனமழை, காட்டாற்று வெள்ளம் ஆகியவற்றால் மக்கள் பலர் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். அவர்களுக்காக நிவாரண நிதிக்காக 27 ஆயிரம் கோடி ரூபாய் தமிழக அரசு கேட்டும், இதுவரை ஒரு பைசா கூட நிதி அளிக்காத மோடி தமிழக மக்களிடம் வாக்கு சேகரிக்க வருகிறார்.
வடமாநில மக்களை ஏமாற்றுவதை போல், தமிழக மக்களை ஏமாற்றிவிடலாம் என்று நினைக்கிறார். தமிழக மக்கள் ஒருபோதும் ஏமாற மாட்டார்கள். பாஜகவிற்கான தக்க தீர்ப்பை தமிழக மக்கள் வரும் தேர்தலில் வழங்குவார்கள். இந்தியா கூட்டணி அனைத்து கட்சிகளுடன் இனைந்து வெற்றிகரமாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு தேர்தலை சந்திக்க தயாராக இருக்கின்றனர்.
ஆனால் மேற்கு வங்கத்தில், முதற்கட்ட வேட்பாளரை அறிவித்த போது பகவான் சிங் என்பவர் தான் தேர்தல் போட்டியிட மாட்டேன் என்று ஓடுகிறார். அந்த அளவிற்கு பாஜக தோல்வி பயத்தில் உள்ளது. நாடு முழுவதும் காங்கிரஸ் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்தியா கூட்டணி (INDIA alliance), 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்" எனத் தெரிவித்தார்.
பின்னர், ராகுல் காந்தி தமிழகத்தில் போட்டியிட வாய்ப்பு உள்ளதா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, "காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஒருங்கிணைந்து ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளனர். அதில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட வேண்டும் என தீர்மானம் போடப்பட்டுள்ளது" எனக் கூறினார்.
மத்திய அரசின் உளவுத்துறை, போதைப்பொருள் கட்டுப்பாட்டு துறை, உளவுத்துறை (RAW) போன்ற துறைகளின் அலட்சியத்தால் தான் தமிழகம், ஆந்திரா, குஜராத் போன்ற பல்வேறு மாநிலங்களில் போதை பொருட்களின் வணிகத்தை சகஜமாகியுள்ளது. இதற்கு பாஜக தான் பொறுப்பேற்க வேண்டும். குறிப்பாக தமிழகத்தை போதை பழக்கங்கள் உள்ள மாநிலமாக மாற்ற பாஜக முயற்சி செய்கிறது" எனக் குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், "பாரதிய ஜனதா கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளிப்போம் என்று கூறியது, அளித்ததா? பெட்ரோல், டீசல் விலை பாதியாக குறைக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தது, குறைத்ததா? கருப்பு பணங்களை பறிமுதல் செய்து ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் 15 லட்ச ரூபாய் வழங்குவதாக கூறினார், கொடுத்தாரா? என கேள்வியை எழுப்பினார்.
இதையும் படிங்க: "பிரதமர் மோடி தமிழகத்திலேயே குடியேறினாலும் ஓட்டு விழாது" - திமுக எம்.பி கனிமொழி விளாசல்!