விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள பருகம்பட்டு கிராமத்தில் ராகவன் வாய்க்கால் அமைந்துள்ளது. இந்த வாய்க்காலில் இருந்து திருநாவலூர் ஏரிக்கு செல்லும் கிளை வாய்க்கால் கரையின் மீது கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்பு கெபி என்று அழைக்கக்கூடிய சிறிய அளவிலான மாதா கோயிலை கட்டி அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் வழிபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ராகவன் வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி கவிதா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில், ராகவன் வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள சிறிய அளவிலான மாதாகோயிலை இடித்து அகற்றி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என விழுப்புரம் மாவட்ட நிர்வாகத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, ராகவன் வாய்க்கால் கரையின் மீது ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த மாதா கோயிலை இடிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை வருவாய்த் துறை அதிகாரிகள் மேற்கொண்டபோது அதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மாதா கோயிலை இடிக்காமல் நகர்த்தி வைப்பதற்கு தேவையான கால அவகாசம் அளிக்க வேண்டும் என கிராம மக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று வருவாய்த் துறை அதிகாரிகள் பலமுறை கால அவகாசம் அளித்தனர். ஆனால், மாதா கோயிலை நகர்த்தி வைப்பதற்கான எந்த பணிகளையும் கிராம மக்கள் மேற்கொள்ளாத நிலையில் ராகவன் வாய்க்காலில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள சிறிய அளவிலான மாதா கோயிலை இடித்து அகற்றுவதற்கான நடவடிக்கையில் இன்று வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க : "எதிர்க்கட்சிகள் எதிரி கட்சியாக இருக்கக் கூடாது" - தமிமுன் அன்சாரி சாடல்! - Thamimum Ansari
அப்போது பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஜேசிபி உதவியுடன் மாதா கோயில் இடிக்கும் பணி நடைபெற்றது. மாதா கோயில் இடிக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து 200க்கும் மேற்பட்டோர் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது மாதா கோயிலை இடிக்க விடாமல் தற்கொலை மிரட்டல் விடுத்தும், மாதா சிலையை அகற்ற விடாமல் கட்டி அனைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வலுகட்டாயமாக தூக்கி சென்று கைது செய்தனர்.
இதனால் ஊர்மக்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும், மேல்புறத்தில் வைக்கப்பட்டிருந்த மாதா சிலையை அகற்றிய போது அங்கிருந்த பெண்கள் கதறி அழுதனர். மாதா கோயிலை இடிக்க முற்பட்டபோது போராட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் மயங்கி விழுந்தததையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் பெண் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.