சென்னை: நாடளுமன்ற தேர்தல் ஏப்.19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக பெறவுள்ளது. இதனையடுத்து தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நாடாளுமன்றத் தேர்தலையொட்டி மத்திய, மாநில அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களைச் சார்ந்த அலுவலர்கள் வாக்குச்சாவடி அலுவலர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை மாவட்டத்தில் 16 சட்டமன்றத் தொகுதிகளில் 3,726 வாக்குச்சாவடிகள் பயன்படுத்தப்படவுள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் 19,396 வாக்குச்சாவடி அலுவலர்கள் பணிபுரியவுள்ளனர். இவர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இதில் எழும்பூர் சட்டமன்றத் தொகுதி, ராட்லர் தெரு, சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பினை சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.
இந்த பயிற்சி வகுப்புகளில் மின்னணு வாக்குப்பதிவு, இயந்திரங்கள், வாக்காளர் சரிபார்ப்பு காகிதத் தணிக்கை இயந்திரம் (VVPAT) ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து செயல்முறை விளக்கம் மூலம் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
இதனையடுத்து 100 வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில், மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்ட 'சிறப்பு விழிப்புணர்வு பேரணி' மற்றும் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், 'நாடாளுமன்றத் தேர்தலில் பொதுமக்கள் மட்டும் அல்ல; மாற்றுத்திறனாளிகளும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். மேலும், அவர்களுக்கான அனைத்து அடிப்படை வசதிகளும் வாக்குச்சாவடியில் செய்யப்பட்டுள்ளது.
85 வயதுக்கு மேற்ப்படோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்கு செலுத்துவதற்கு 12 டி படிவம் வழங்க வேண்டும். இதன்படி, 85 வயதுக்கு மேற்பட்ட 63,751 நபர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 10,370 பேர் அடையாளம் கண்டறியப்பட்டு அவர்களுக்கும் வாக்கு செலுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன.
அதே நேரத்தில் மாற்றுத்திறனாளிகள் வாக்குச்சாவடியில் வந்து வாக்களிக்க விரும்பினால், அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்கிறோம். சென்னையில் 60 சதவீதம்தான் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
சென்னையில் இதுவரை உரிய ஆவணங்கள் இல்லாத 5.7 கோடி ரூபாய் மதிப்பிலான நகை மற்றும் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் யாரும் உரிய ஆவணங்கள் இன்றி 50ஆயிரம் ரூபாக்கு மேல் எடுத்து செல்வதை தவிர்க்க வேண்டும்' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:"எந்த ஜென்மத்திலும் தமிழ்நாட்டில் பாஜகவின் கனவு பலிக்காது" - சசிகாந்த் செந்தில் பேட்டி! - Sasikanth Senthil