சென்னை: கத்தார் நாட்டு தலைநகர் தோகாவிலிருந்து கத்தார் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் அதிகாலை 3 மணிக்கு தோகாவிலிருந்து சென்னைக்கு வந்துவிட்டு, அதே விமானம் மீண்டும் அதிகாலை 4 மணிக்கு சென்னையில் இருந்து தோகாவுக்கு புறப்பட்டு செல்லும்.
இந்நிலையில் இன்று அந்த விமானத்தில் சென்னையில் இருந்து தோகா செல்வதற்கு சுமார் 320 பயணிகள் இருந்தனர். அவர்கள் இன்று அதிகாலை 1.30 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து விட்டனர். ஆனால் தோகாவிலிருந்து அதிகாலை 3 மணிக்கு சென்னை வர வேண்டிய கத்தார் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தோகாவிலிருந்து சென்னை வருவதற்கு தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் எதிர்முனையில் இருந்து கத்தார் செல்லும் பயணிகள் விமானமும் தாமதமாக புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் பயணிகள் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் காத்திருந்தனர்.
இதையடுத்து சென்னையில் இருந்து தோகாவிற்கு இந்த விமானம் தாமதமாக காலை 6.30 மணிக்கு புறப்பட்டு செல்லும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. அதன் பின்பு 7.30 மணிக்கு புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் தோகாவில் இருந்து விமானம் காலை 7.00மணி வராததால் பயணிகள் ஆத்திரம் அடைந்து கடும் வாக்குவாதங்களில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 19 தமிழக மீனவர்கள் தாயகம் திரும்பினர்!
பின் அந்த விமானத்தின் பராமரிப்பாளர்களான இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் பயணிகளை சமாதானப்படுத்தி டீ, காபி, குளிர்பானங்கள் வழங்கி அமைதிப்படுத்தினார்கள். அதன் பிறகு காலை 8 மணி அளவில் அந்த விமானம் தோகாவிலிருந்து சென்னை வந்து சேர்ந்தது.
இதனைத் தொடர்ந்து இந்த விமானம் சுத்தப்படுத்தப்பட்டு, பின் பயணிகள் அனைவரும் விமானத்தில் ஏற்றப்பட்டு இன்று காலை 9.40 மணிக்கு சென்னையில் இருந்து 320 பயணிகளுடன் கத்தார் நாட்டின் தலைநகர் தோகாவுக்கு புறப்பட்டு சென்றது. இவ்வாறு சென்னை விமான நிலையத்தில் பயணிகள் பல மணி நேரம் காத்திருப்புக்குள்ளாக்கபட்ட சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.