தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் பகுதியில் இலங்கைத் தமிழர்களுக்குப் போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் பெற்று விநியோகம் செய்யப்படுவதாக கியூ பிரிவு போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து கியூ பிரிவு போலீஸ் துணை எஸ்.பி சிவசங்கரன், இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையிலான 10 பேர் கொண்ட குழுவினர் அப்பகுதியில் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த விசாரணையில், இலங்கைத் தமிழர்களுக்குப் போலியாக ஆவணங்கள் தயாரித்து அதை ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தும், உரிய போலீஸ் விசாரணை ஏதும் நடத்தாமல், அதற்கு ஒப்புதல் வழங்கியும், பாஸ்போர்ட் அலுவலகத்தில் உள்ள சிலரின் துணையோடு இந்திய அரசின் பாஸ்போர்ட் வழங்கியதும் தெரியவந்தது.
இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், குறிப்பிட்ட ஒரு காவல்நிலைய போலீசார் முறையாக விசாரணை நடத்தாமல் செயல்பட்டது தெரிந்தது. மேலும், இதற்கு உடந்தையாக சேதுபாவாசத்திரம் அருகேயுள்ள ஆண்டிக்காடு கிராம அஞ்சலக ஊழியராக பணியாற்றிய கோவிந்தராஜ் (64), கும்பகோணத்தைச் சேர்ந்த வடிவேல் (52), ராஜூ (31), சேதுபாவாசத்திரம் காவல் நிலையத்தின் தற்காலிக கம்யூட்டர் ஆப்ரேட்டர் பாலசிங்கம் (36), திருச்சி கல்கண்டார்கோட்டையைச் சேர்ந்த வைத்தியநாதன் (52), ராஜா மடத்தைச் சேர்ந்த சங்கர் (42) ஆகிய 6 பேரைக் கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் க்யூ பிரிவு போலீசார் கைது செய்தனர்.
மேலும் இவ்வழக்கில், கடந்த ஜனவரி மாதம் கும்பகோணம் பம்பப்படையூரைச் சேர்ந்த சங்கரன் (52) என்பவரைக் கைது செய்தனர். இருப்பினும் இவ்வழக்கில் முக்கிய நபரான சேதுபாவாசத்திரம் காவல்நிலையத்தின் எழுத்தருமான சேஷா (47) சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்தார். இவ்வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி விசாரணையின் போது, போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் பெற்ற விவகாரத்தில், முக்கிய நபரும் உடந்தையாக இருந்த சேஷாவை கைது செய்ய வேண்டுமென நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து, தலைமறைவாக இருந்த சேஷாவை க்யூ பிரிவு போலீசார் வலைவீசித் தேடிவந்தனர். இந்த நிலையில், பிப்.16 ஆம் தேதி தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் பதுங்கியிருந்த சேஷாவை கைது செய்த போலீசார், பட்டுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் அவரை திருச்சி மத்தியச் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: சிவில் நீதிமன்ற நீதிபதியான விஏஓ லூர்து பிரான்சிஸ் மகன்... தந்தையை இழந்த சோகத்திலும் சாதனை!