தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து இலங்கைக்கு சமீப காலமாக மஞ்சள், பீடி இலை, களைக்கொல்லி மருந்து உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடத்தலில் ஈடுபடும் நபர்களை அவ்வப்போது 'கியூ' பிரிவு போலீசார் (Q division police) மற்றும் கடலோர காவல் படையினர் மடக்கி பிடித்து வருகின்றனர். மேலும், சட்டவிரோதமாக கடத்தி செல்வதைத் தடுப்பதற்காக கடற்கரையோரங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் மாவட்டம், திருச்செந்தூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட காயல்பட்டினம் கடற்கரையில் கியூ பிரிவு காவல் ஆய்வாளர் விஜய அனிதா தலைமையில் உதவி ஆய்வாளர் ஜீவமணி தர்மராஜ், சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்பையா, தலைமை காவலர் ராமர், மணிகண்டன், இருதயராஜ், காவலர் பழனி, பாலமுருகன் ஆகியோர் இன்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, கடற்கரையில் நிறுத்தியிருந்த பைபர் படகில் சோதனை செய்தபோது, அதில் 30 கிலோ வீதம் 80 மூட்டைகளில் பீடி இலைகள் சட்ட விரோதமாக இலங்கைக்கு கடத்த முயன்றது தெரியவந்து. இதையடுத்து சுமார் 2,500 கிலோ பீடி இலைகளைப் படகுடன் போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.20 லட்சம் ஆகும். இது தொடர்பாக, திரேஸ்புரத்தைச் சேர்ந்த அந்தோணிசாமி மகன் அந்தோணிதுரை (52) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: காவல் நிலையத்தில் மரணம் அடைந்த கவுன்சிலர் விவகாரம்; ஆவடி காவல் ஆணையர் சங்கர் கூறுவது என்ன?