வேலூர்: வேலூர் மக்களவைத் தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ சி சண்முகம் இன்று வேலூர் மக்களவைத் தொகுதிக்கான 63 தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ஏ.சி சண்முகம், “ வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்குப்பட்ட மக்கள் பயன்பெறும் வகையில் காவேரி பாலாறு இணைப்பு திட்டம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.
கோதாவரி பாலாறு இணைப்பு திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். பாலாற்றில் தடுப்பணைகள் கட்டப்படும். உலகத் தரம் வாய்ந்த எய்ம்ஸ் மருத்துவமனை வேலூரில் நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும். முத்ரா கடன் திட்டம் ரூபாய் பத்து லட்சத்திலிருந்து 20 இலட்சமாக மாற்ற உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். சபரிமலைக்குச் சிறப்பு ரயில் சேவை துவங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கூட்டுக் குடிநீர் திட்டம் பல இடங்களில் விரிவுபடுத்தப்படும். ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும்,மத்திய அரசு கொண்டுவந்துள்ள அனைத்து திட்டமும் செயல்படுத்தப்படும்.வேலூரில் தொழிற்பேட்டை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். வேலூர் நகரில் போக்குவரத்து நெரிசலையில் குறைக்க சுற்று வட்ட சாலை மற்றும் மேம்பாலங்கள் அமைக்கப்படும். வேலூர் கோட்டையில் பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். குடியாத்தம் பகுதியில் மத்திய அரசு ராணுவத் தளவாட உற்பத்தி மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
வாசனைத் திரவிய தொழிற்சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆம்பூர் வாணியம்பாடி பேர்ணாம்பட்டு பகுதிகளில் நலிவடைந்து வரும் தோல் தொழிற்சாலைகள் புதுப்பிக்கத் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என ௬௩ தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்” என்றார்.