புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம், ரெட்டியார்பாளையம் புதுநகர் பகுதியில் கழிவறைகள் மூலமாக விஷவாயு தாக்கி 2 மூதாட்டிகள் மற்றும் ஒரு சிறுமி உட்பட மூன்று பெண்கள் உயிரிழந்தனர். மேலும், எட்டுக்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் விஷவாயு தாக்கப்பட்ட புதுநகர் பகுதியை, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் வீடு வீடாக நேரில் சென்று சுமார் ஒரு மணிநேரம் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அங்கிருந்த அதிகாரிகளிடம் விஷவாயு பரவியதற்கான காரணங்கள் குறித்தும், தற்போது எடுக்கப்பட்டுள்ள தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ன என்பது குறித்தும் கேட்டறிந்தார். அப்பொழுது அந்த பகுதி மக்கள் ஆளுநரை சூழ்ந்து கொண்டு தினம் தினம் பயந்து பயந்து இருப்பதாகவும், உடனடியாக தீர்வு காண வேண்டும் என கூறினர்.
இதனை கேட்டுக் கொண்ட ஆளுநர், முதலில் தற்போது நடந்துள்ள சம்பவம் போன்று இனிமேல் நடக்காத அளவிற்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதிப்படுத்த வேண்டும், அதற்கு தேவையான அனைத்து பணிகளையும் செய்து முடித்துவிட்டு விஷவாயு கசிவுக்கு காரணமாக இருந்த அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்தார்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், "இந்த பகுதியில் எல்லாம் கவனக்குறைவாக நடைபெறுகின்றது. நடவடிக்கைகள் சரியாக நடைபெறவில்லை. விஷவாயு தாக்கி 4 நாட்கள் ஆகின்றது. ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
நேற்றிரவு எங்களுடன் இருந்த ஒரு பெண்மணி தற்போது சிகிச்சையில் உள்ளார். என்ன நிலவரம் என தெரியவில்லை. சுகாதாரம் சீர்கெட்டு இருக்கிறது. என்ன ப்ளான் பண்ணி இந்த டேங்க் கட்டினார்கள் என தெரியவில்லை. 17 ஊர் சாக்கடை தண்ணீர் புதுநகரில் கலக்கின்றது. எந்த ஜேஇஇ, ஏஇ இந்த மாதிரி ப்ளான் போட்டு இதை கட்டினார்கள்? என தெரியவில்லை.
இதற்கு சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுத்து, காரணமான அனைத்து அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தயவு செய்து இந்த பொது கனெக்ஷனை ஏரிக்கரை பக்கம் மாற்றிவிட வேண்டும். எங்கே அதிகாரிகள் இருந்தாலும், இப்பகுதிக்கு வந்து இங்கிருக்கும் பிரச்னையைத் தீர்க்க வேண்டும்.
எங்களால் பயந்து பயந்து சாக முடியாது. வீட்டில் சமைக்க முடியவில்லை. எதை திறந்தாலும் பயமாக இருக்கிறது. எல்லா அதிகாரியும் இங்கே தங்கி இந்த பிரச்னையைத் தீர்க்க வேண்டும். இல்லையென்றால், நாங்கள் பேருந்து மறியல் போராட்டம் நடத்துவோம்" என்று கூறினர்.
முன்னதாக, செய்தியாளர்களைச் சந்தித்த துணைநிலை ஆளுநர், "புதுநகர் பகுதியில் பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாகவே விஷவாயு பரவி இருக்கிறது. இதனால் மூன்று பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இதற்கு காரணமான அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் .
மேலும், சுத்திகரிப்பு நிலையத்தில் வீட்டு கழிவுகள் மட்டுமில்லாமல் தொழிற்சாலை கழிவுகள், மருத்துவமனை கழிவுகள் கலக்கப்பட்டு இருந்தால் சம்பந்தப்பட்ட தொழிற்சாலை மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தற்போது புதுச்சேரியில் உள்ள அதிகாரிகளை வைத்து புதுநகர் பகுதியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தேவைப்படும்பட்சத்தில், செலவை பொருட்படுத்தாமல் வெளிமாநிலத்திலிருந்து நிபுணர் குழுவை வரவழைத்து இந்த பகுதி முழுவதும் ஆய்வு செய்யப்படும். மேலும் புதுச்சேரி முழுவதும் உள்ள சுத்திகரிப்பு மையங்களை ஆய்வு செய்து பாதுகாப்பு குறைபாடுகள் இருந்தால் அவை உடனுக்குடன் சரி செய்யப்படும்.
பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை, பயப்பட தேவையில்லை. ஆம்புலன்ஸ் உடன் கூடிய மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேவைப்படும்பட்சத்தில் அங்கே சிகிச்சையையும் மேற்கொள்ளலாம்" என்று குறிப்பிட்டார்.
ஆளுநரின் ஆய்வின்போது பொதுப்பணித் துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் சிவசங்கரன், அரசு துறை உயர் அதிகாரிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க: கண்ணகி நகரில் மைதானம் அமைத்து தர கபடி வீராங்கனை ஸ்டாலினிடம் கோரிக்கை! - CM MK STALIN