மதுரை: மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் ஸ்டாலின் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், "மேலூர் பகுதி விவசாயம் மற்றும் நெல் சாகுபடி பரப்புளவு அதிகமுள்ள பகுதியாகும். இப்பகுதி விவசாய பணிகளுக்கு வைகை அணையே முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது. வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவை பொறுத்தே விவசாயப் பணிகள் நடைபெறும்.
எனவே பெரியாறு அணையில் இருந்து பெறப்படும் நீர் வரவு, நீர் பகிர்வு முறை மிகவும் முக்கியமானது. வைகை அணையில் மொத்தம் 71 அடி உயரம் வரை தண்ணீர் தேக்கி வைக்கப்படுகிறது. அரசாணை படி மேலூர் பகுதி விவசாயம் மற்றும் பாசனத்திற்கு 120 நாட்கள் தண்ணீர் விநியோகம் செய்ய வேண்டும். ஆனால் 90 நாட்களுக்கு தான் தண்ணீர் திறக்கப்படும் என தற்போது புதிய அரசாணை வெளியிட்டு, 33 நாட்கள் கடந்துள்ளது.
120 நாட்களுக்கு, நீர் திறப்பு இல்லை எனில், போதிய விளைச்சலை எதிர்பார்க்க முடியாது. இது மேலூர் பகுதி விவசாயிகளுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தும். அதிகாரிகள் தன்னிச்சையாக தண்ணீர் திறப்பை 120 நாட்களில் இருந்து 90 நாட்களாக குறைத்து உள்ளனர். இதனால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்படும். எனவே 120 நாட்களுக்கு முழுமையாக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் விஜயகுமார் அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, பெரியார் வைகை வடி நிலப் பிரிவு செயற்பொறியாளர் (நீர்வள அமைப்பு) சிவபிரபாகர் உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த அறிக்கையில், “14.11.2023 தேதியிட்ட நீர்வள துறையின் அரசாணைப்படி 15.11.2023 முதல் 10 நாட்களுக்கு பெரியாறு பிரதான கால்வாய் மற்றும் திருமங்கலம் ஆகிய ஒரு போக சாகுபடி பகுதிகளுக்கு குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது.
85 ஆயிரத்து 563 ஏக்கர் பெரியாறு பிரதான கால்வாய் மற்றும் திருமங்கலம் பிரதான கால்வாயின் கீழ் உள்ள 19 ஆயிரத்து 439 ஏக்கர் நிலத்திற்கு 90 நாட்களுக்கு நீர்வளத்துறையின் அசாணைப்படி 19.12.2023 பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. எனவே (90+10) 100 நாட்களுக்கு முற்றிலும் தண்ணீர் உறுதி செய்யப்பட்டு உள்ளது.
மேலும், வைகை மற்றும் பெரியாறு அணையில் 18.03.2024 நிலவரப்படி நீர் இருப்பை பொறுத்து, மொத்தம் 120 நாட்களுக்கு ஒரு போக சாகுபடி பகுதிக்கு தண்ணீர் திறந்து விடப்படும்" என தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: அவமதிப்பு வழக்கில் நேரில் ஆஜராகாத எஸ்.பிக்கு பிடிவாரண்ட்.. மதுரை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!