ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் காவனூர் ஊராட்சியில் காவனூர், நரசிங்கபுரம், காவனூர் காலனி, சில்வர் பேட்டை, ஷா நகர், அண்ணா நகர் ஆகிய பகுதிகள் அடங்கியுள்ளன. இந்த ஊராட்சியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இதில் காவனூர் காலனி பகுதியில் மட்டும் 2 ஆயிரத்து 500 க்கும் மேற்பட்ட மக்கள் உள்ளனர். இப்பகுதியில் அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, கழிவுநீர் கால்வாய் வசதி, தெரு விளக்கு வசதிகள், அரசு பள்ளி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை.
மேலும் ரேஷன் கடை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், 100 நாள் வேலை திட்டம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் மகளிர் குழு கடன் தருவதில்லை. காவனூர் ஊராட்சியை சேர்ந்தவர்கள் வேண்டுமென்றே எங்களை புறக்கணிக்கின்றனர். எனவே காவனூர் காலனி, ஷாநகர், சில்வர்பேட்டை, அண்ணாநகர் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய தனி ஊராட்சி ஏற்படுத்தித் தர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி காவனூர் காலனி பேருந்து நிலையத்தில் 200க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மேலும் சாலையின் குறுக்கே வாகனங்களை நிறுத்தியும் போக்குவரத்துக்கு தடை ஏற்படுத்தினர். இதனால் அரக்கோணத்தில் இருந்து காவனூர், கீழ்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் மக்கள் அவதிக்குள்ளாகினர். இது குறித்து தகவலறிந்து வந்த அரக்கோணம் நகர காவல் ஆய்வாளர் பாரதி மற்றும் காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் சுமூகமான தீர்வு ஏற்படாத நிலையில் 2 மணி நேரத்துக்கும் மேலாக மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து காவனூர் காலனியை சேர்ந்தவர் கூறியதாவது, “காவனூர் காலனி பகுதியில் 3 வார்டுகள் உள்ள நிலையில், இங்கு 2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகிறோம். இருப்பினும், எங்கள் பகுதிக்கென்று எந்தவித வளர்ச்சி பணிகளையும் ஊராட்சி நிர்வாகம் செய்வதில்லை. எங்களுக்கென்று தனியாக அரசு பள்ளி, ரேஷன் கடை கிடையாது. 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவதில்லை. வேலைவாய்ப்பும் எங்கள் பகுதி இளைஞர்களுக்கு கிடைப்பதில்லை.
கிராம சபை கூட்டங்களில் எங்களின் தேவையை எடுத்துரைத்தும் எங்களுக்காக எந்த சலுகையும் கிடைப்பது இல்லை. இதனால் எங்களுக்கென்று தனி பஞ்சாயத்து உருவாக்கி தர வேண்டும். இதை வலியுறுத்தியே காவலூர் காலனி மக்கள் ஒன்றிணைந்து இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்” என்று தெரிவித்தார். அதைத் தொடர்ந்து நகர காவல் ஆய்வாளர் பாரதி அப்பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, இது குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததன் அடிப்படையில் அப்பகுதி மக்கள் சாலை மறியலை கைவிட்டனர்.
இதையும் படிங்க: தைப்பூச திருவிழாவின் போது விபரீதம்! தேர் கவிழ்ந்து விபத்து - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பக்தர்கள்!