மயிலாடுதுறை: மயிலாடுதுறை கலைஞர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் அஜித்குமார். இவர் கடந்த 2022ஆம் ஆண்டு மயிலாடுதுறையில் நடைபெற்ற பாமக பிரமுகர் கண்ணன் என்பவரின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலிருந்தவர். இந்த நிலையில், அஜித்குமார் அண்மையில் ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
நேற்று (புதன்கிழமை) இரவு மயிலாடுதுறை திருவிழந்தூர் பரிமள ரங்கநாதர் கோயில் தெற்கு வீதி பகுதியில், தனது உறவினர் சரவணன் உடன் வாகனத்தில் சென்றபோது மர்ம நபர்கள் கொடூரமாகத் தாக்கியதில் அஜித்குமார் தலை சிதைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும், அவருடன் வந்த உறவினர் பலத்த காயங்களுடன் அருகிலிருந்த வீட்டிற்குள் சென்று பதுங்கிக் கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அஜித்குமாரின் உடலை கைபற்றி, உடற்கூராய்விற்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், படுகாயம் அடைந்த உறவினர் சரணவனனை மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காகத் தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதனிடையே படுகொலை சம்பவத்தைக் கண்டித்தும், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக் கோரியும் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நேற்று இரவு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அதனை அடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
இந்நிலையில், இன்று காலை முதல் மயிலாடுதுறை - கும்பகோணம் இடையிலான பிரதான சாலையில் மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி கோஷங்களை எழுப்பினர். அதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையத்திற்குப் பேரணியாகச் சென்ற போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கிருந்த கடைகளை உடைத்து, பேரி கார்டுகளை சாலையில் தள்ளியதால் பரபரப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து பேருந்து நிலையம் பகுதிகளில் உள்ள கடைகள் அனைத்து அடைக்கப்பட்டன. மேலும், மயிலாடுதுறை வரும் பேருந்துகள் எதுவும் பேருந்து நிலையத்திற்குள் செல்லாமல் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டுள்ளது.
மேலும், பாதுகாப்புப் பணிகள் கருதி அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். குறிப்பாக இந்த சம்பவத்தால் மயிலாடுதுறையில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
இதையும் படிங்க: அதிமுகவுக்கு எதிராகப் போராட்டத்தில் குதித்த புரட்சி பாரதம் கட்சியினர்...விழுப்புரத்தில் நடந்தது என்ன?