சென்னை : பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறை இயக்குனர் செல்வ விநாயகம் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு சிறப்பு பேட்டி அளித்தார். அதில், "வடகிழக்கு பருவமழை காலத்தில் மக்களுக்கு ஏற்படும் நோய்த் தொற்றில் இருந்து பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
மருத்துவமனைகளுக்கு பருவமழை காலத்தில் மருந்துகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்வது, அவசர சிகிச்சை அளிப்பது, நோய்த் தடுப்பு நடவடிக்கைகள், பாம்பு கடி போன்றவற்றிற்கு சிகிச்சை அளிப்பது தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளன.
இந்த மாதம் பிரசவிக்க வேண்டிய கர்ப்பிணி பெண்களை முன்கூட்டியே கண்டறிந்து, அவர்கள் பாதுகாப்பாக மருத்துவமனையில் பிரசவிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். தமிழ்நாட்டில் 2,200க்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. மேலும் 476 நடமாடும் மருத்துவ வாகனங்களும் உள்ளன.
காய்ச்சல் போன்ற பாதிப்புகள் அதிகம் உள்ள பகுதிகளுக்கு நடமாடும் வாகனங்களை அனுப்பி அங்கு தேவையான மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்படும். இம்மாதத்தில் 88 ஆயிரம் கர்ப்பிணிகள் பிரசவிக்க உள்ளனர். அவர்கள் குறித்த விவரம் பொது சுகாதாரத் துறையிடம் உள்ளது. அவர்களை அணுகி மழையால் பாதிப்பு ஏற்படுவதற்கு முன்னர் மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்த உள்ளோம்.
இதையும் படிங்க : கனமழை வந்தால் என்ன? - சென்னையில் நாளை முதல் கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கம்!
மழைநீர் மற்றும் கழிவுநீர் கலப்பதால் சிலருக்கு வாந்தி, பேதி, வயிற்றுப்போக்கு, காய்ச்சல் போன்றவை ஏற்படலாம். அவர்களுக்கும் சிகிச்சை அளிக்க தயார் நிலையில் உள்ளோம். 6 மாதத்திற்கு தேவையான மருந்து மாத்திரைகள் கையிருப்பில் உள்ளது. மருத்துவ முகாம்கள் எவ்வாறு சுத்தத்தை கடைபிடிக்க வேண்டும் என்பதை அறிவுறுத்தி உள்ளோம்.
உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து பாதுகாப்பான குடிநீர் வழங்கவும், குளோரின் கலக்கப்பட்ட குடிநீரை வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். மழைக் காலங்களில் காய்ச்சல், இருமல், சளி போன்றவை வந்தால் சுயமாக மாத்திரை எடுத்துக் கொள்ளாமல் அருகில் உள்ள மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.
காய்ச்சிய நீரைப் பருக வேண்டும். மழை நேரங்களில் குழந்தைகளை மழைநீரில் விளையாட அனுமதிக்கக் கூடாது. தற்போதுள்ள மருத்துவர்கள் பருவமழைக்கு தேவையான முகாம்களை நடத்த போதுமான அளவில் உள்ளனர். ஒவ்வொரு பகுதியில் பாதிப்பு ஏற்படும்போது பிறபகுதியில் இருந்து மருத்துவர்கள் அழைத்து வந்து சிகிச்சை வழங்குவோம்" என தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்